சினிமாவில் நாம் நடிக்கும் நடிகர்களாக பார்க்கும் பலரையும் அவர்கள் அதில் மட்டும் கவனம் செலுத்தி வருவதாக நினைப்போம். ஆனால் அவர்கள் சினிமாவின் வேறு துறையிலும் பட்டையை கிளப்பி இருப்பவர்கள் என்பதுக்கு நமக்கு தெரியாத விஷயமாக இருக்கும். ரவி மரியா, மனோபாலா, சிங்கம் புலி, இளவரசு என பலரை சொல்லி கொண்டே போகலாம். அந்த வரிசையில் முக்கியமானவர் தான் இயக்குனர் மற்றும் நடிகர் மௌலி.
இவர் தென்னிந்திய திரை உலகில் பல நகைச்சுவை படங்களை இயக்கி நகைச்சுவையில் ஒரு புரட்சி செய்தவர். அவரது ’ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது’ என்ற படத்தை பார்த்து ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்து இப்படி ஒரு காமெடி படம் எடுக்க முடியுமா என அவருக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
இவர் சிறு வயதிலேயே நாடகங்கள் நடிப்பதில் ஆர்வம் கொண்டிருந்த நிலையில், இன்னொரு பக்கம் தனது படிப்பையும் சரிவர கவனித்து வந்தார். பிடெக் படித்த அவர் பல நாடகங்களில் பணியாற்றி உள்ள நிலையில், கே பாலசந்தர் நாடகக் குழுவில் இணைந்தும் நடித்துள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அவரது நாடக குழு பாராட்டு விழா நடத்திய போது அவரது முன்னிலையில் ’காதலுக்கு கண் இல்லை’ என்ற நகைச்சுவை நாடகத்தை நடத்தியதோடு சிவாஜி கணேசனின் பாராட்டுக்களையும் பெற்றிருந்தார். இதன் பிறகு அவர் பல நாடகங்களில் நடித்ததோடு சில நாடகங்களை இயக்கவும் செய்தார். நாடகக்கலையில் அவர் காமெடி காட்சிகளை வித்தியாசமான பாணியில் கொடுத்திருந்தது தான் சிறப்பம்சமாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் தான் அவர் நாடகத்தைத் தொடர்ந்து திரைப்படத்திலும் காலடி எடுத்து வைத்தார். மற்றவை நேரில் என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான அவர், இதனை நடித்து இயக்கவும் செய்திருந்தார்.
அதன்பின் ‘நன்றி மீண்டும் வருக’ ’அண்ணே அண்ணே’ போன்ற படங்களை இயக்கி நடித்தார். இந்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் அவர் இயக்கிய படங்கள் ஏராளம். இது தவிர சில படங்களுக்கு அவர் கதை, வசனம் எழுதி உள்ளார். குறிப்பாக கமல்ஹாசனின் ’பம்மல் கே சம்பந்தம்’ என்ற திரைப்படத்தை அவர் இயக்கி திரைக்கதை எழுதினார். அதேபோல் கமல்ஹாசன் தயாரித்த ’நள தமயந்தி’ என்ற படத்தையும் இவர்தான் இயக்கினார்.
சிவாஜி கணேசன் நடித்த ஹிட்லர் உமர்நாத் உள்பட ஒரு சில படங்களுக்கு அவர் திரைக்கதை மட்டும் எழுதி உள்ளார். மேலும் அவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த 1973 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அவர் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் கூட அவர் ஆர்.ஜே பாலாஜியின் தாத்தாவாக நடித்திருந்தார்.
மேலும் அவர் ஒரு டப்பிங் கலைஞராகவும் இருந்ததுடன் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள், கலசம், நாதஸ்வரம், குலதெய்வம் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். கல்யாணமாம் கல்யாணம் என்ற விஜய் டிவி தொடரிலும் அவர் நடித்துள்ளார் 76 வயதான மௌலி, இன்னும் தனக்கான சினிமா வாய்ப்பு கிடைத்தாலும் அதனை பயன்படுத்தி கொண்டே தான் இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.