நடிகர் திலகம் என்ற பெயர் ஒன்றும் சும்மா வந்துவிடவில்லை. நாடி, நரம்பெல்லாம் சினிமா இரத்தம் ஊறி நடிப்பையே முழு மூச்சாகக் கொண்டு கொடுத்த வேடத்தில் கன கச்சிதமாய் வாழ்ந்து காட்டியவர்தான் சிவாஜி கணேசன். எந்த கதாபாத்திரமானாலும் அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்று தோன்றும் அளவிற்கு அவர்களையே மிஞ்சி வியப்பில் ஆழ்த்தி விடுவார். சுதந்திரப் போராட்ட தியாகிகள் படமாக இருக்கட்டும், காவல் துறை வேடமாக இருக்கட்டும், கடவுள் வேடமாக இருக்கட்டும் சிவாஜியின் நடிப்பை மிஞ்ச இன்னும் எத்தனை தலைமுறை வந்தாலும் இனி ஒரு நடிகர் பிறக்கப் போவதில்லை என்பது தான் உண்மை.
அப்படிப்பட்ட நடிகர் திலகத்திற்கே ஒருமுறை அவர் நடிப்பில் படக்குழுவிற்கு சந்தேகம் வர அவர்கள் வியந்து போகும் அளவிற்கு ஒரே டேக்கில் 850 அடி பிலிம் வசனத்தை அசத்தலாகப் பேசி நடித்துள்ளார் சிவாஜி கணேசன். சிவாஜி கணேசனுக்கு ஹாலிவுட் தரத்தில் கூட நடிக்க தெரியும் என்று சோ ஒரு முறை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஆனால் தமிழ் மக்களுக்கு இப்படி நடித்தால்தான் பிடிக்கிறது என்பதால்தான் நாடக பாணியிலேயே அவர் நடித்து வந்தார்.
ராஜா ராணி என்கிற திரைப்படத்தை படமாக்கும் பொழுது அந்த படத்தில் ஒரே காட்சியில் பேசும் வசனம் ஒன்றை எழுதி இருந்தனர். அந்த ஒரு வசனத்தை 850 அடி ரீலில் பதிவு செய்ய வேண்டும். ஆனால் அப்பொழுது பிலிம் ரோல் கொண்டு படம் எடுத்ததால் திரும்பத் திரும்ப எல்லாம் ஒரே காட்சியை எடுக்க முடியாது. அது தயாரிப்பாளருக்கு ஏகப்பட்ட பண விரயத்தை ஏற்படுத்தும்.
எனவே நடிப்பதற்கு முன்பு ஒரு முறை ஒத்திகை பார்த்துக் கொண்டு பிறகு படத்தில் அதை அப்படியே நடிக்க வேண்டும் என்ற நடைமுறையேஅப்போது இருந்தது. இந்த நிலையில் இந்த பெரும் வசனத்தை சிவாஜி கணேசனை வைத்து எடுக்கும் பொழுது தவறுகள் வந்தால் திரும்பத் திரும்ப முதலில் இருந்து எடுக்க வேண்டும்.
எனவே வேண்டாம் என்று முடிவு செய்தனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சிவாஜி கணேசன் என் நடிப்பின் மீது உங்களுக்கு சந்தேகம் இருக்கிறதா என்று சத்தம் போட்டுவிட்டு அந்த வசனத்தை வாங்கி அதை முழுதாக மனப்பாடம் செய்துவிட்டு நடிக்க துவங்கியிருக்கிறார்.
ஒரே டேக்கில் அந்த மொத்த வாசகத்தையும் பேசி நடித்துக் காட்டினார் சிவாஜி கணேசன். தமிழ் சினிமாவிலேயே இப்போது வரை அவ்வளவு நீளமான காட்சியில் அவ்வளவு வசனங்களை வேறு எந்த நடிகரும் பேசவில்லை என்று கூறப்படுகிறது அப்படியான ஒரு சாதனையை ராஜா ராணி திரைப்படத்தில் சிவாஜி கணேசன் செய்தார். இந்த வசனத்தை எழுதியது யாருமல்ல பேனா முனையால் கூர் தீட்டிய வசனங்களை எழுதி மறுமலர்ச்சி செய்த கலைஞர் கருணாநிதிதான்.