விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் சில வாரங்கள் சிறப்பாக தான் சென்று கொண்டிருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக மிக மோசமாக சென்று கொண்டிருப்பதாகவும், உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் எந்தவித சுவாரஸ்யமும் இன்றி ஆடிக் கொண்டிருப்பதாகவும் ரசிகர்கள் பலரும் கூட விமர்சிக்கத் தொடங்கி விட்டனர்.
தீபாவளிக்கு முன்பு வரை பல போட்டியாளர்கள் சண்டை, சச்சரவு என இருக்க ஒவ்வொரு நாளும் மிக விறுவிறுப்பாக தான் சென்று கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ஆறு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் வருவதாகவும் அறிவிக்கப்பட்டது. போட்டியாளர்கள் தொடர்பாக பல பெயர்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில் தற்போது ரயான், வர்ஷினி, மஞ்சரி உள்ளிட்ட ஆறு பேர் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
மூன்று பேர் வெளியேற்றப்பட்ட பிறகு 15 பேர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த நிலையில் இந்த ஆறு பேருடன் சேர்த்து மொத்தம் 21 பேர் தற்போது உள்ளனர். ஆட்கள் அதிகமாக இருப்பதால் சில முடிவுகள் எடுக்கும் போது நிறைய சண்டைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்பதால் இதில் பரபரப்பை அதிகரிக்கக் கூடிய விஷயங்களும் நிறைய இருந்தது.
ஆனால் இது எதுவுமே பிக் பாஸ் வீட்டில் நடந்ததாக தெரியவில்லை. புதிய போட்டியாளர்கள் வந்து ஒரு வாரமான நிலையில் இதன் சுவாரசியத்தை அதிகரிக்க எந்த நிகழ்வுகளும் நடைபெறாததால் இதனை தொடர்ந்து பார்க்கும் பார்வையாளர்களே தற்போது சலிப்படைய தொடங்கி விட்டனர். இதற்கு மத்தியில் விஜய் சேதுபதி வந்த போது புதிய போட்டியாளர்கள் வரவால் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ன மாற்றங்கள் நிகழ்ந்தது என்பது பற்றி ஒவ்வொரு பழைய போட்டியாளர்களிடம் கேள்வி கேட்டார்.
இதற்கு ஒவ்வொருவருமே ஒவ்வொரு பதில் தெரிவிக்க முத்துக்குமரன் சொன்ன கருத்து தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. “ஆறு பேர் வந்ததும் நாங்க மிரண்டு போயிட்டோம். கேம மாத்த போறாங்கன்னு நாங்க நினைச்சிட்டு இருந்தோம். மூணாவது நாள் எல்லாரும் மயக்கம் போட்டு ஆளுக்கு ஒரு மூலைல போய் இருந்தாங்க. அவங்க வர்றதுக்கு முன்னாடி 24 x 7 எல்லாரும் பாக்குறாங்க. அப்படின்னு எங்க கேம் பத்தி சொன்னாங்க. இப்ப அவங்களே மக்கள் எங்களை பாத்தா என்ன, பாக்கலனா என்னன்னு இருக்காங்க.
ஆனா வந்த ஆறு பேர்ல இன்ட்ரெஸ்ட்டா மாத்துன ஆள் ஒருத்தர பத்தி சொல்லணும். வந்த ஒரு வாரத்துல இவ்ளோ ஜெல் ஆகமுடியுமானு ஆச்சர்யப்பட்ட ஆளு ரயான் தான் சார். பொண்ணுங்க டீம் கூட பயங்கரமா ஜெல் ஆயிட்டாரு. கொஞ்சமாச்சும் எங்க பக்கம் எட்டிப் பார்ப்பாருன்னு பாத்தா எங்க மூஞ்சு எல்லாம் பிடிக்காம மறுபடியும் அந்த பக்கமே திரும்பிட்டாரு. அதுனால வந்த ஆட்கள்ல ரயான் கேமை சுவாரஸ்யமா மாத்தி இருக்காரு” என முத்துக்குமரன் சொல்லி முடித்ததும் ரயானை நினைத்து அரங்கமே கத்தி சிரிக்கத் தொடங்கி விட்டது.