தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கடந்த 11 வாரங்களை விட இந்த வாரம் அதிக சுவாரஸ்யமும், அதிக விறுவிறுப்பும், அதிக ஆனந்த கண்ணீருடனும் நிரம்பி வழிகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு காரணம் Freeze டாஸ்க் இந்த வாரம் நடைபெறும் என பிக் பாஸ் அறிவித்திருந்தது தான்.
அந்த வகையில், கடந்த 11 வாரங்களாக எலிமினேட் ஆகாமல் பிக் பாஸ் வீட்டில் தப்பித்த போட்டியாளர்கள், தங்களது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களை மிகவும் ஒரு எமோஷலான தருணத்தில் சந்தித்து பல விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர். ஃப்ரீஸ் டாஸ்க் என்பது எமோஷனல் மற்றும் நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்ப உறுப்பினர்களை சந்திக்கிறார்கள் என்பதை தாண்டி அவர்கள் இத்தனை நாட்கள் எப்படி ஆடினார்கள் என்பதை நெருங்கிய ஒருவரிடம் இருந்து தெரிந்து கொள்ளவும் வழி செய்கிறது.
இதன் மூலம், பிக் பாஸ் ஃபைனல் நெருங்கி வருவதன் அடிப்படையில் தங்களது கேம் பிளானை மாற்றிக் கொள்ளவும் நிறைய வழிகள் உருவாகும் என தெரிகிறது. இதனால் அனைத்து போட்டியாளர்கள் கவனமாக இருப்பார்கள் என்பதால் வரும் நாட்கள் நிச்சயம் களைக்கட்டலாம். இதனிடையே, ஆரம்பத்தில் வந்த தீபக், விஷால், ரயான் என பல போட்டியாளர்களின் குடும்பத்தினர், பிக் பாஸ் வீட்டிற்குள் முரண்பாடுள்ள போட்டியாளர்கள் பற்றி தெரிவித்த போது அருண் பிரசாத்தின் பெயரை தெரிவித்திருந்தனர்.
அருண் பிரசாத் தந்தை விமர்சனம்..
இதனால், அவர் சற்று மனமுடைந்து காணப்பட்டார். இதற்கு மறைமுகமாக ஒரு கட்டத்தில் ஆறுதலும் தெரிவித்திருந்தார் முத்துக்குமரன். இந்த நிலையில், அருண் பிரசாத்தின் பெற்றோர் வந்திருந்த போது அவரது தந்தை, முத்துக்குமரன் ஒரு இடத்தில் ஆடிய விதம் தனக்கு பிடிக்கவில்லை என வெளிப்படையாக தெரிவித்திருந்தார். அப்படி இருக்கையில், மற்றொரு பொழுதில் முத்துகுமரனும் தனக்கு சொந்தம் தான் என யாரும் அறியாத தகவலை அருண் பிரசாத்தின் தந்தை பகிர்ந்திருந்தார்.
முத்துவும், அருணும் உறவினரா..
அப்போது முத்துகுமரனிடம் பேசும் அருண் பிரசாத்தின் தந்தை, “நீ என்னுடைய உறவினர் தான். நீங்கள் மிகவும் நெருங்கிய உறவினர்கள். முத்து எங்களின் நெருங்கிய உறவினர் என்பது முதலில் தெரியாது. அதன் பின்னர் தான் எங்களது குடும்பத்தினரிடம் இருந்து முத்து பற்றி தகவல் கிடைத்தது. அந்த உறவில் அருண் பிரசாத் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு முத்துவும் எனக்கு முக்கியம்” என கூறுகிறார்.
இதன் பின்னர் பேசும் முத்துக்குமரன், “அப்ப நாங்கள் போடுவது அங்காளி பங்காளி சண்டை. நாம் பார்ப்பதற்கு அண்ணன் தம்பி மாதிரி இருக்கிறோம் என அருண் அடிக்கடி என்னிடம் கூறுவார்” என நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். இந்த விஷயம் பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவருக்குமே வியப்பை கொடுக்க, அடிக்கடி சண்டை போட்டு வந்த முத்து மற்றும் அருணை அனைவரும் சேர்ந்து அங்காளி, பங்காளி என கலாய்த்து வருகின்றனர்.