பிக் பாஸ் வீடு என வந்து விட்டாலே சர்ச்சைகளுக்கும், சச்சரவுகளுக்கும் எந்தவித குறையும் இருக்காத அளவுக்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஏதாவது ஒரு பிரச்சனைகள் உருவாகிக் கொண்டே தான் இருக்கும். அப்படி இந்த வாரத்து ஹாட் டாபிக்காக மாறி இருந்த சம்பவம் தான் முத்துக்குமரனை பிக் பாஸ் பகிரங்கமாக எச்சரித்திருந்தது. கேப்டன்சி டாஸ்கிற்காக வேண்டுமென்றே பவித்ராவிற்கு அவர் விட்டுக்கொடுத்து தோல்வியடைந்தார் என பிக் பாஸ் எச்சரித்ததுடன் மட்டும் இல்லாமல் உங்களுக்காக 500 பேர் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் இப்படிதான் ஆடுவீர்களா என்றும் மிக மிக கடுமையாகவும் விமர்சனத்தை முன் வைத்திருந்தார்.
இதனால் முத்துக்குமரன் மற்றும் பவித்ரா மட்டுமல்லாமல் பிக் பாஸ் வீட்டில் இருந்த அனைவருமே அதிர்ச்சி அடைந்து போக, கேப்டன்சி டாஸ்கை ரத்து செய்வதாக அறிவித்திருந்தார் பிக் பாஸ். மேலும் நாமினேஷன் ப்ரீ பாஸ் இந்த வாரம் இல்லை என்றும் அறிவிக்க, ரயானின் பொன்னான வாய்ப்பும் கைநழுவி போனது. தொடர்ந்து பிக் பாஸிடம் பலமுறை முத்துக்குமரன் மன்னிப்பு கேட்டும் அவர் அது பற்றி எதுவும் பதில் பேசாமல் இருக்க, பவித்ராவும் அவரிடம் பேசும் படி பிக் பாஸிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
உயிரை கொடுத்து ஆடணும்..
இப்படியாக பிக் பாஸ் வீட்டிற்குள் பல பிரச்சனைகள் நடைபெற இந்த சம்பவம் குறித்து முத்து மற்றும் பவித்ரா ஆகியோரும் பல உருக்கமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது முத்துவை அழைத்து அருகில் அமர வைத்து பேசும் பவித்ரா, “நான் என்பதற்காக நீங்கள் அப்படி செய்தீர்களா? அல்லது என் மேல் எதாவது தவறு இருக்கிறதா?” என கேட்கிறார்.
இதற்கு பதில் தெரிவிக்கும் முத்து, “என்னைப் போன்ற மீடியாவில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு எல்லாம் இப்படி ஒரு வாய்ப்பு எளிதில் கிடைத்து விடாது. ஜெயிக்கிறோமோ தோற்கிறோமோ அதை தாண்டி 106 நாட்கள் கடினமாக உழைத்து ஃபைனல் ஸ்டேஜில் நிற்க வேண்டும். இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதை எளிதாக எடுத்து விடக்கூடாது என்று தான் உயிரைக் கொடுத்து அனைவருமே விளையாடுகிறார்கள்.
அதுதான் வலிக்குது..
அப்படித்தான் கேப்டன்சி டாஸ்கில் கஷ்டப்பட்டு போராடி வந்து நின்றால் இப்படி நடந்ததும் பிக் பாஸ் கோபமாக பேசியது வருத்தமாகி போனது” என முத்து கூறுகிறார். இதன் பின்னர் பேசும் பவித்ரா, ‘முத்து இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் இப்படி ரியாக்ட் செய்திருப்பார்களா என எனக்கு தெரியாது’ என்றும் கூறுகிறார்.
இதன் பின்னர் பேசும் முத்துக்குமரன், “அதுதான் எனக்கு மிகவும் வலிக்கிறது. பிக் பாஸை கோபப்படுத்தியதுடன் அதற்காக உழைக்கும் 500 பேரையும் கஷ்டப்படுத்தி விட்டேன். வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் அனைவரையும் நிற்க வைத்து காலில் விழவும் நான் தயார். யாரும் நமக்காக இப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள்” என வருத்தம் அடைகிறார். இப்படி பவித்ரா மற்றும் முத்து ஆகியோர் தங்களது ஆட்டத்தில் நடந்த பிரச்சனைகள் பற்றி மிக உருக்கமாக பேசிய விஷயங்களும் ரசிகர்கள் மத்தியில் பேசுப பொருளாக மாறி உள்ளது.