தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் அனிருத். கடந்த வருடம் ரஜினிகாந்த், விஜய், ஷாருக்கான் உள்ளிட்ட இந்திய சினிமாவின் பெரிய நடிகர்களின் படத்திற்கு இசையமைத்திருந்த அனிருத், அடுத்ததாக கமல்ஹாசன், ஜூனியர் என்டிஆர், அஜித் குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கும் இசையமைக்க உள்ளார்.
இளம் வயதிலேயே இசையில் சாதித்த அனிருத் பற்றி பலருக்கும் தெரியும் என்ற நிலையில், அவரது தந்தை ஒரு நடிகர் என்பது பலருக்கும் அரிதாகவே தெரிந்த விஷயமாகும். அனிருத்தின் தந்தை பெயர் ரவி ராகவேந்திரா. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதாவின் உடன் பிறந்த சகோதரர். ரஜினிகாந்தின் மைத்துனரான இவர் லக்ஷ்மி என்பவரை திருமணம் செய்து கொண்டார். லட்சுமி ஒரு நடன கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனிருத் தந்தை ரவி ராகவேந்திரா தமிழ் திரை உலகிலும், சின்னத்திரை உலகில் பல முக்கிய கேரக்டரிலும் நடித்துள்ளார். கடந்த 1984 ஆம் ஆண்டு ‘வாய்ச் சொல்லில் வீரனடி’ என்ற படத்தில் தான் ரவி ராகவேந்திரா அறிமுகமானார். அதன் பிறகு சிவாஜி கணேசன் நடித்த ’ஆனந்த கண்ணீர்’ என்ற திரைப்படத்தில் ரகு என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.
இதையடுத்து கமல்ஹாசன் நடித்த ’காதல் பரிசு’, விசு இயக்கத்தில் உருவான ’வரவு நல்ல உறவு’ ’வேடிக்கை என் வாடிக்கை’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’படையப்பா’ திரைப்படத்தில் வள்ளி செல்லையா என்ற கேரக்டரில் கலக்கியவர் ’திவான்’ ’வானம்’ ’காதலில் சொதப்புவது எப்படி’ ’நீதானே என் பொன்வசந்தம்’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் கடந்த ஆண்டு வெளியான ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ ’ராக்கெட்டரி’ ’கணம்’ ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ’கங்குவா’ என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரிலும் ரவி ராகவேந்திரா நடித்து வருகிறார்.
திரையுலகில் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரவி ராகவேந்திரா பல சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். குறிப்பாக அண்ணாமலை, வந்தே மாதரம், வீட்டுக்கு வீடு லாட்டரி, சொல்லத்தான் நினைக்கிறேன், நிலவைத் தேடி, மணிக்கூண்டு போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.
தற்போது 61 வயதாகும் ரவி ராகவேந்திரா இன்றும் தனக்கேற்ற கேரக்டர் கிடைத்தால் மறுக்காமல் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். மகன் ஒரு பக்கத்தில் முன்னணி இசையமைப்பாளராக கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் இன்னும் ரவி ராகவேந்திராவுக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது.