சிரிக்கவும் வைப்பாரு, கண்கலங்கவும் வைப்பாரு.. கொடி கட்டிப் பறந்த ‘பயபுள்ள’ சாமிக்கண்ணுவின் வாழ்க்கை

By Bala Siva

Published:

தமிழ் திரை உலகின் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர்களில் ஒருவர்தான் சாமிக்கண்ணு. இவர் மகேந்திரன் இயக்கிய பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக முள்ளும் மலரும் என்ற திரைப்படத்தில் ‘பயபுள்ள’ என்ற வசனத்தை அடிக்கடி பேசி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருப்பார்.

நடிகர் சாமிக்கண்ணு சென்னையை சேர்ந்தவர். இவர் சிறு வயதிலேயே படிப்பில் நாட்டம் கொள்ளாமல் நாடகத்தில் நடிப்பதை விரும்பினார். எட்டு வயதிலேயே அவர் நாடகத்தில் நடித்ததாக கூறப்பட்டது. இதனை அடுத்து அவர் சிறு வயதிலேயே பல நாடகங்களில் நடித்த நிலையில் கடந்த 1954 ஆம் ஆண்டு வெளியான ’புதுயுகம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

அதன் பிறகு சபாஷ் மாப்பிள்ளை, கர்ணன், சித்தி, செல்வம், பேசும் தெய்வம், பாமா விஜயம், நான், பணமா பாசமா உள்ளிட்ட பல திரைப்படங்களை நடித்தார். கடந்த 1970களில் இவர் ஏராளமான படங்களில் நடித்தார். குறிப்பாக சவாலே சமாளி, மீண்டும் வாழ்வேன், குறத்தி மகன், பட்டிக்காடா பட்டணமா, ராஜபார்ட் ரங்கதுரை, உரிமை குரல், மனிதனும் தெய்வமாகலாம், ஆயிரத்தில் ஒருத்தி, அன்னக்கிளி போன்ற பல படங்களில் நடித்தார்.

இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் உருவான உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தில் இவர் கருப்பையா என்ற நாவிதர் கேரக்டரில் நடித்து அசத்தியிருப்பார். இந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் இரு குழந்தைகளுக்கும் அவர் மொட்டை அடிக்கும் போது கண்கலங்க வைப்பார். அதன் பிறகு மகேந்திரன் இயக்கத்தில் உருவான ஜானி, மெட்டி உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு குறிப்பிடும் வகையில் இருக்கும். குறிப்பாக ஜானி திரைப்படத்தில் ரஜினியிடம் ஏமாறும் கேரக்டரில் நடித்திருப்பார்.

இவருக்கு திருப்புமுனையை கொடுத்த படம் என்றால் சிவகுமார் நடித்த வண்டிச்சக்கரம் என்று சொல்லலாம். அதேபோல் சிவப்பு மல்லி என்ற படத்தில் இவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தார். கமல்ஹாசன் நடித்த சகலகலா வல்லவன் படத்தில் கமலுக்கு அப்பாவாக நடித்தார். கடந்த 1996 ஆம் ஆண்டு வைகறை பூக்கள் என்ற படத்தில் நடித்திருந்த நிலையில் அந்த படமே அவரது கடைசி படமாக ஆனது.

கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாங்கிய நடிகர் சாமிக்கண்ணுவுக்கு விசாலாட்சி என்ற மனைவியும் அம்பிகா, ராஜேஸ்வரி ஆகிய இரு மகள்களும் விவேகானந்தன், தயானந்தன் ஆகிய இரு மகன்களும் உள்ளனர். குடும்பத்தைச் சேர்ந்த எவரையும் அவர் சினிமாவில் நடிக்க அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தனது இறுதி காலத்தில் அவர் தனது குடும்பத்துடன் பள்ளிக்கரணை என்ற பகுதியில் வசித்து வந்த நிலையில் 2017ஆம் ஆண்டு 96 வது வயதில் முதுமை காரணமாக காலமானார். அவரது இறுதிச் சடங்கில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கேரக்டர்களில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ வைத்த சாமிக்கண்ணுவை இன்றும் திரையில் பார்த்தால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக தான் இருக்கும்.