இசை அமைப்பாளர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், கங்கை அமரன், சங்கர் கணேஷ், தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார் என சிலரை குறிப்பிட்டு சொல்லலாம்.
அதே நேரம் பழைய படங்களில் என்றால் நமக்கு சட்டென்று நினைவுக்கு வருபவர் மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதன் தான். இவர் இசையில் இப்போது பாடல்களைக் கேட்டாலும் நமக்கு இதமாக இருக்கும். அவ்வளவு ரசனை மிக்க இவர் தமிழ்ப்படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.
தமிழ்த்திரை உலகில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என கொடிகட்டிப் பறந்த ஜாம்பவான் நடிகர்களுக்கு எல்லாம் இசை அமைத்தவர் எம்எஸ்விஸ்வநாதன்.
பல புகழ்பெற்ற வெற்றிப்பாடல்களையும், தத்துவம் மற்றும் காதல், சோகப் பாடல்களையும் தமிழ்த்திரை உலகிற்குக் கொண்டு வந்து சேர்த்த பெருமை இவரையேச் சாரும். இந்த மாபெரும் இசை மேதை இளையராஜாவோடு சேர்ந்தும் பணியாற்றியுள்ளார். மெல்லத்திறந்தது கதவு, செந்தமிழ்ப்பாட்டு, செந்தமிழ் செல்வன், விஸ்வ துளசி என்ற 4 படங்களில் இசை அமைத்துள்ளார்.
தில்லுமுல்லு படத்திற்காக இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜாவோடு சேர்ந்தும் இசை அமைத்துள்ளார்.
இவர் தமிழ்த்திரை உலகில் இசை அமைக்க ஆரம்பித்த ஆண்டு 1951. அன்று முதல் 90 வரை 40 ஆண்டுகளாக இவர் தான் முடிசூடா மன்னர். தமிழ், தெலுங்கு, மலையாளம் என இவர் பல்வேறு மொழிகளில் மொத்தம் 1200க்கும் மேற்பட்ட படங்களில் இசை அமைத்து அசத்தியுள்ளார்.
இவர் முதன் முதலில் பாடிய பாடல் இடம்பெற்ற படம் பாசமலர். இவர் பிற இசை அமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ளார். அந்த வகையில் வி.குமார், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், கங்கை அமரன், யுவன் சங்கர் ராஜா, தேவா, ஜி.வி.பிரகாஷ் உள்பட பலரது இசையில் இவர் 100க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் திலகம் சிவாஜி நடித்த புதிய பறவை படத்திற்காக இவர் தனித்துவமிக்க இசையை வாசித்து இருந்தார். இந்தப் படத்தில் வரும் எங்கே நிம்மதி பாடல் காலத்தால் அழிக்க முடியாத காவியப்பாடல். இந்தப் பாடலில் ஒரு சிறப்பு உண்டு. அதாவது இந்தப் பாடலுக்கு 300 வகையான இசைக்கருவிகளைக் கொண்டு இசை அமைத்தாராம்.
அதே வேளையில், தனது மற்றொரு பாடலில் இன்னொரு தனித்துவத்தையும் செய்துள்ளார். அதாவது மூன்றே இசைக்கருவிகளைக் கொண்டு உருவாக்கியுள்ளாராம். அந்தப் பாடல் தாழையாம் பூ முடிச்சு. இந்தப் பாடல் இடம்பெற்ற படம் பாகப்பிரிவினை.
மெல்லிசை மன்னர் என்றால் சும்மாவா?