Pant அணியாமல் நேராக ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு வந்த நம்பியார்.. அவரே சொன்ன சுவாரஸ்ய காரணம்..

By Ajith V

Published:

எம்.என். நம்பியார் என்ற பெயரைக் கேட்டாலே அடுத்து நம் மனதில் நினைவுக்கு வருவது மிரட்டலான வில்லன் என்ற விஷயம் தான். வில்லன் கதாபாத்திரத்திற்காகவே பெயர் போன நம்பியார், எம்ஜிஆருக்கு வில்லனாக ஆயிரத்தில் ஒருவன், நாடோடி மன்னன், எங்க வீட்டுப் பிள்ளை, குடியிருந்த கோவில் உட்பட எக்கச்சக்க திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நம்பியார் தனது திரை பயணத்தை நடிகராக தொடங்கி இருந்தாலும் அதன் பின்னர் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று அதிகம் நடிக்க ஆரம்பித்தார். 7 தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நம்பியார் நடிப்பில் 1950-களில் வெளியான திகம்பர சாமியார் என்ற திரைப்படத்தில் 11 வேடங்களில் நடித்து அப்போதே மிரட்டி இருப்பார். ஏறக்குறைய ஆயிரம் திரைப்படங்கள் வரை நடித்துள்ள நம்பியார், தனது பெயரில் நாடக கம்பெனி ஒன்றையும் ஆரம்பித்திருந்தார்.

எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என தான் சினிமாவில் அறிமுகமான சமயத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்த நம்பியார், அதன் பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பாக்யராஜ், விஜய், பிரசாந்த், விக்ரம் என பல தலைமுறை நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். திரைப்படத்தில் வில்லனாக தோன்றி இருந்தாலும் நிஜத்தில் மிகவும் நல்ல மனம் படைத்தவர்.

எந்த கெட்ட பழக்கமும் இல்லாத நம்பியார், ஸ்ரீ ஐயப்பனின் தீவிர பக்தன் ஆவார். கேரளாவில் உள்ள சபரிமலைக்கு தனது வாழ்நாளில் மொத்தம் 65 முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இதனால் குருசாமி என்ற மற்றொரு பெயரும் நம்பியாருக்கும் உண்டு. அதே போல, கடந்த 2008 ஆம் ஆண்டு 89 வது வயதில் நம்பியார் மறைந்தார். அவர் மறைந்த காலமும் சபரிமலை சீசன் என்பதால் அய்யப்பன் அருள் அவருக்கு இருந்ததாகவும் அப்போது குறிப்பிட்டிருந்தனர்.

இதனிடையே, ஷூட்டிங் ஸ்பாட்டில் மிகவும் ஜாலியாக நம்பியார் செய்தது தொடர்பான விஷயம் ஒன்று, பலரையும் நெகிழ வைத்துள்ளது. இது தொடர்பாக, இயக்குனர் NS ராஜேந்திரன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் அசிஸ்டன்ட் இயக்குனராக இருந்த போது இந்த சம்பவம் நடந்ததாக தெரியும் நிலையில், இது பற்றி அவர் பேசுகையில், “பெண்ணரசி என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்தது. நடிகர்களை கூப்பிட்டு வரும்படி என்னிடம் சொன்னதும் நான் நம்பியார் இருந்த மேக்கப் அறைக்கு ஓடினேன். அவர் அப்போது தான் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார்.

அவர் பேண்ட் போட போன சமயத்தில் நான் சென்று, ஷாட் ரெடியானதால் உங்களை அழைத்து வரும்படி சொன்னார்கள் என்றேன். அவர் ஷாட் ரெடியா என கேட்டு விட்டு, பேண்டை என் கையில் கொடுத்து விட்டு ஜட்டியுடன் அவர் நடக்க தொடங்கி விட்டார். நேரடியாக ஸ்பாட்டுக்கும் நம்பியார் சென்று விட, தான் பேண்ட் போட போன சமயத்தில் ஷாட் ரெடி என அழைத்ததாகவும் அதனால் அப்படியே வந்து விட்டேன் என்றும் வேடிக்கையாக நம்பியார் பதில் சொன்னார்.

அவர் சீரியஸாக பேச, நான் புதிதாக திரைப்படத்தில் பணிபுரிந்ததால் எனக்கு பயம் தொற்றிக் கொண்டது. இறுதியில் என்னை தட்டி கொடுத்து விட்டு, நீங்கள் ஷாட் ரெடி என்றதும் எவ்ளோ sincere-ஆக வந்தேன் பார்த்தீர்களா என கூறி விட்டு நம்பியார் கடந்து சென்றார்” என ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.