விஜய் படத்தை மிஸ் செய்ததது நான் செய்த மிகப்பெரிய தவறு… இயக்குனர் சேரன்!

By Nithila

Published:

வாழ்வியலின் எதார்த்தங்களை திரையில் காட்டியவர் சேரன். அவருக்கு சினிமா மீது ஆசை ஏற்பட காரணமாக இருந்தவர் நடிகர் திலகம். அவர் திரையில் வரும் காட்சிகளும், பேசும் வசனங்களையும் கைதட்டி ரசித்ததோடு மட்டுமல்லாமல், தானும் அப்படி ஒரு நடிகனாக வேண்டுமென்ற எண்ணம் சேரனுக்கு ஏற்பட்டது.

மதுரை மாவட்டத்தின், மேலூரைச் சேர்ந்த சேரன். குடும்ப சூழல் காரணமாக, வேலை தேடி சென்னை வந்து ஒரு வேலையில் சேர்ந்திருக்கிறார். ஆனால், மீண்டும் சினிமா ஆசை அவரை தொற்றிக் கொண்டது. சினிமா வாய்ப்பினை தேடி, அலைந்து ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

நடிகனாக வேண்டுமென்று வந்த சேரனின் ஆசை, களத்தில் சாத்தியப்படவில்லை. அவர் வேலை பார்த்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமாரின் அறிமுகம் கிடைத்தது. அதை பயன்படுத்தி கே.எஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார் சேரன். ‘புரியாத புதிர்’, ‘சேரன் பாண்டியன்’, ‘சூரியன் சந்திரன்’ போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

கமலின் ‘மகாநதி’ படத்தில் சந்தன பாரதியிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார் சேரன். கமலின் எண்ண ஓட்டம், வித்தியாசமான அணுகுமுறை சேரனை மிகவும் ஈர்த்திருக்கிறது. அவருடன் இணைந்து நிச்சயம் பணியாற்ற வேண்டுமென்ற எண்ணம் உருவாகி இருக்கிறது.

அதற்கான வெற்றியே ‘மகாநதி’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்ற கிடைத்த வாய்ப்பு. ஆனால், அந்த படத்தில் பணியாற்றிய போது ஏற்பட்ட மனக்கசப்பால், பாதியிலேயே ‘மகாநதி’ பட வேலைகளில் இருந்து விலகி விட்டார் சேரன். பத்து படங்களுக்கு மேல் உதவி இயக்குனராக பணியாற்றி பின், இயக்குனராக முயற்சிக்கலாம் என முடிவு செய்தார் சேரன். அது சாத்தியப்படவே பார்த்திபன், மீனா நடிப்பில் ‘பாரதி கண்ணம்மா’ என்ற அப்படம் உருவானது.

பின்னர், பொற்காலம், தேசிய கீதம் போன்ற படங்கள் சேரனுக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. ஆட்டோகிராப் படம் சேரனுக்கு தேசிய விருதினை பெற்றுக் கொடுத்தது. இந்த படத்திற்கு பின், சேரனுக்கு தளபதி விஜய்யிடம் கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அவரிடம் கதை சொல்லியபோது எந்தவித கவனச் சிதறலும் இல்லாமல் முழு மூச்சாக கதையை கேட்டிருக்கிறார். விஜய்யின் கதை கேட்கும் நுட்பத்தை பார்த்து வியந்தார் சேரன். நடிகர் திலகம் சிவாஜிக்குதான் கதையின் ஆரம்பம் முதல் இறுதி வரை அசையாமல், கதை கேட்பார். அந்த பழக்கத்தை மீண்டும் விஜய்யிடம்  பார்த்திருக்கிறார். அதைக் கண்டு வியந்து போனதாக கூறியிருக்கிறார். விஜய்க்கும் சேரனின் கதை பிடித்து போகவே படத்தில் நடிப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறார், தேதிகளும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

vijay 2

அந்த சமயத்தில் சேரனின், ‘தவமாய் தவமிருந்து’ படத்தின் படப்பிடிப்பு முடிவு பெறதா நிலையில் இருந்துள்ளது. அதை பாதியில் விட்டு விட்டு, விஜய்யின் படத்தை இயக்க மனமில்லாமல், அந்த வாய்ப்பினை கைவிட்டிருக்கிறார். அதன் பின், மீண்டும் விஜய்யை சந்தித்து கதை சொல்லும் வாய்ப்பு சேரனுக்கு கிடைக்கவில்லை.

விஜய்யினை இயக்கும் வாய்ப்பினை தவற விட்டதை நினைக்காத நாளில்லை. அந்த வாய்ப்பினை மட்டும் பயன்படுத்தி இருந்தால், தன்னுடைய சினிமா கேரியர் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்திருக்கும் என்று நம்புவதாக சேரன் கூறியிருக்கிறார்.