ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசித்தை அலங்கரிக்கும் ‘மின்சார கனவு’ படத்தின் கார்!!

By Nithila

Published:

தமிழ் சினிமாவை மாற்றுப் பாதை நோக்கி அழைத்து வந்ததில் ஏவிஎம்மின் பங்கு அளப்பரியது. தொழில் நுட்பம் மற்றும் கதை இரண்டிலும் புதுமையை புகுத்தியது ஏவிஎம். நடிகர் திலகம் மற்றும் குழந்தை நட்சத்திரமாக உலக நாயகன் என மேலும் பல முதன்மை நடிகர்களை அறிமுகப்படுத்தியது ஏவிஎம் தான். தமிழ் சினிமாவில் கால் பதித்த ஏவி.மெய்யப்பன் அவர்கள் தொடர்ந்த பணியை, தற்போது அவரது குடும்பத்தினர் முன்னெடுத்து செல்கின்றனர்.

உலகளவில் இயங்கி வரும் ஸ்டூடியோக்களில், இடைவெளியே இல்லாமல் 50 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஐந்தில் ஒரு ஸ்டூடியோவில் ஏவிஎம்மும் ஒன்று. சினிமாவை தொடர்ந்து, சின்னத்திரையின் தாக்கம் அதிகரித்த போது டிவித் தொடர்களையும் தயாரிக்க தொடங்கினார்கள். இப்படி புதுப்புது பரிணாமங்களாக தங்களை மாற்றிக் கொண்டே வந்தனர்.

ஏவிஎம் கடைசியாக தயாரித்த டாப் ஹீரோக்களின் படங்கள் சிவாஜி, அயன், வேட்டைக்காரன். அதன் பின் பெரிய படங்களை தயாரிக்காமல் சிறு படங்களில் கவனம் செலுத்தி வந்தனர். தற்போது ஏவிஎம் நிறுவனத்தினர் ஓடிடியிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். தங்களுடைய 75 வருட சினிமா பயணத்தில், 177 படங்களை தயாரித்திருக்கிறது ஏவிஎம் நிறுவனம். அந்நிறுவனம் இந்த ஆண்டு மே மாதம் சென்னை வடபழனியில் ’ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’ ஒன்றை திறந்துள்ளனர்.

அங்கு ஏவிஎம் ஸ்டூடியோ தயாரித்த படங்களில் பயன்படுத்தப்பட்ட கேமிராக்கள், முக்கிய பொருட்கள், புகைப்படங்கள் மற்றும் கார்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ராஜீவ் மேனன் இயக்கத்தில் அரவிந்த் சாமி, பிரபுதேவா, கஜோல் நடித்திருந்த படம் ‘மின்சார கனவு’ இந்த படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தனர். கதைப்படி பெரும் புள்ளியாக வரும் அரவிந்த் சாமி படத்தில், பென்ஸ் கார் ஒன்றை பயன்படுத்தி இருப்பார்.

அந்த கார் தற்போது மியூசியத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தினர் தங்களுடைய எக்ஸ் தளத்தில் தெரிவித்தனர். இதனை நடிகர் அரவிந்த் சாமி பார்வையிட்டது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பதிவிட்டிருந்தனர். ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம் பொது மக்களின் பார்வைக்காக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி வழங்கப்படுகிறது. தமிழ் திரையுலகில் ஏவிஎம்மின் பங்கை மக்களுக்கு காட்ட இது நல்ல முயற்சியாகும்.