எம்.ஜி.ஆர் சொல்லிய ஐடியா..! பிடிக்காமல் எம்.ஜி.ஆரை விமர்சித்த இயக்குநர்.. பின்னாளில் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குநராக மாறிய நிகழ்வு!

By John A

Published:

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நாடகத் துறையில் இருந்து நடிக்க ஆரம்பித்தவர். ஆகவே சினிமாவின் அத்தனை கலைகளும் அத்துப்படி. இப்போது எப்படி நாம் கமல்ஹாசனைக் கொண்டாடுகிறோமோ அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆரைக் கொண்டாடியிருக்கிறார்கள். ஏனெனில் சினிமாவில் நடிப்பு மட்டுமன்றி இயக்கம், கேமரா, திரைக்கதை, வசனம் என அத்தனையும் அத்துப்படி.

அதேபோல் தான் நடிக்கும் படங்களில் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்த்துக் கொள்வார். இப்படி சினிமாவின் அத்தனை இலக்கணங்களையும் கற்றுத் தேர்ந்த எம்.ஜி.ஆரை இயக்குநர் ஒருவர் விமர்சித்து பின்னாளில் இவரும்-எம்.ஜி.ஆருமே கிட்டத்தட்ட 17 படங்களில் இணைந்திருக்கின்றனர்.

1957-ல் எம்.ஜி.ஆர், அஞ்சலி, என்.எஸ்.கிருஷ்ணன், பி.எஸ்.வீரப்பா போன்றோர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட்டான படம்தான் சக்கரவர்த்தி  திருமகள். இந்தத் திரைப்படத்தினை இயக்கியவர் பழம்பெரும் இயக்குநர் ப.நீலகண்டன்.

இந்தப் படத்தில் ‘ஆடவாங்க அண்ணாத்தே… அஞ்சா தீங்க அண்ணாத்தே…‘ என்றொரு பாடல் உண்டு. இந்தப் பாடலில் எம்.ஜி.ஆர் சிறப்பாக நடனமாடியிருப்பார். இந்தப் பாடலின் காட்சி படமாக்கப்பட்ட வேளையில் செட்டில் நுழைந்து எம்.ஜி.ஆர் பார்த்திருக்கிறார். அப்போது கேமரா ஆங்கிள் சற்று கீழே இறக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனைக் கண்ட எம்.ஜி.ஆர். “இவ்வளவு அழகாக செட் போட்டிருக்கீறீர்கள்.. அதிக செலவு செய்திருக்கிறீர்கள்.. அப்புறம் ஏன் கேமராவை லோ ஆங்கிளில் வைத்திருக்கிறீர்கள். மேலே உயர்த்தி வைத்தால் முழு செட்டின் அழகும் நன்றாகத் தெரியுமே என்று அங்குள்ளவர்களிடம் யோசனை கூறியிருக்கிறார். பின் கேமரா ஆங்கிளை மாற்றிவிட்டு என்னைக் கூப்பிடுங்க என்று மீண்டும் மேக்கப் அறைக்குள் நுழைந்திருக்கிறார்.

பாவ மன்னிப்பு படம் பார்த்து பாச மலர்களாக மாறிய சிவாஜி- லதா மங்கேஷ்கர்.. இப்படி ஒரு பாசமா..!

எம்.ஜி.ஆர் சொன்னதை உதவியாளர்கள் இயக்குநர் நீலகண்டனிடம் கூறிய பொழுது அவர் டென்ஷனாகி, “படத்தின் டைரக்டர் நானா அவரா? அவர் எப்படி கேமரா ஆங்கிளை மாற்றச் சொல்லலாம். மேலும் அவ்வாறு செய்தால் எவ்வளவு நேரம் விரயமாகும்“ என்று கோபத்தில் பொங்கியிருக்கிறார்.

இப்போது இருப்பது போலவே படமாக்கலாம் நீ எம்.ஜி.ஆரை அழைத்து வா என்று உதவியாளருக்கு கட்டளையிட்டிருக்கிறார் நீலகண்டன். எம்.ஜி.ஆரிடம் உதவியாளர் இதைத் தயங்கியபடியே சொல்ல எம்.ஜி.ஆரோ, “காட்சி நல்லா வரணுமே என்ற எண்ணத்தில் தானே சொன்னேன். எவ்வளவு நேரம் ஆனாலும் பராவயில்லை. நான் நடித்துக் கொடுத்துவிட்டுப் போகிறேன்.  டைட்டில்ல கேமரா ஆங்கிள் எம்.ஜி.ஆருன்னா போடப் போறாங்க.. காட்சி நல்லா வந்தா இயக்குநருக்குத்தானே நல்ல பெயர்“ என்று கூறியிருக்கிறார்.

எம்.ஜி.ஆரின் இந்தக் கருத்து இயக்குநரை யோசிக்க வைக்க அவர் விருப்பப்படியே கேமரா ஆங்கிள் மாற்றப்பட்டு பின் அந்தப் பாடல் எடுக்கப்பட்டது. சொன்னது போலவே பாடல் காட்சி நன்றாக வந்தது.

இப்படி மோதலில் ஆரம்பித்த இவர்களின் நட்பு பின்னாளில் பலப்பட்டது. அதன்பின் ப.நீலகண்டன் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குநராக கிட்டதட்ட 17 படங்களுக்கு மேல் இயக்கிய பெருமையைப் பெற்றார்.