எம்.ஜி.ஆர் படத்துக்கு மியூசிக் போட்ட இளையராஜா.. வெளிவராமலே பாதியில் முடங்கிய சோகம்

By John A

Published:

எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவனுக்குப் பிறகு தமிழ்சினிமாவில் அன்னக்கிளி படம் மூலமாக அறிமுகமாகி இசையில் செய்யாத சாதனைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இசைஞானியாகத் திகழ்கிறார் இளையராஜா. சிவாஜி, ரஜினி, கமல், கார்த்திக், பிரபு, சத்யராஜ், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, தனுஷ் என இந்தத் தலைமுறை நடிகர்கள் வரை அவரது இசைப்பயணம் தொடர்கிறது.

ஆனால் ஒரே ஒரு குறையாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் படத்திற்கு மட்டும் அவர் இசையமைக்காமல் இருந்தார். 1975-க்குப் பிறகு அந்த வாய்ப்பும் கை கூடியது. ஆம்.. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்காக இளையராஜா படம் ஒன்றில் இசையமைக்க ஒப்பந்தமானார். அந்தப் படம்தான் உன்னை விட மாட்டேன். எம்.ஜி.ஆர் முதல்வராக ஆன பிறகு இந்தப் படம் அறிவிக்கப்பட்டது.

இந்தப் படத்திற்காக பாடல் பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கையில் ஒருமுறை எம்.ஜி.ஆர் ரெக்கார்டிங் ஸ்டுடியோவிற்கு வந்தார். அப்போது அந்தப் பாடலை இளையராஜா பாடிக் காண்பித்திருக்கிறார். சரி ஓகே யார் பாடப் போகிறார்கள் என்று கேட்டவுடன் டிஎம் சௌந்தரராஜன் என்று கூற பின் பாடல் பதிவு நடைபெற்றது. மறுபடியும் இந்தப் பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர் பாடல் தனக்கு திருப்தி இல்லை. வேறு யாரையாவது பாடச் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

பிறகு அந்தப் பாடல் மலேசியா வாசுதேவன் குரலில் பதிவு செய்யப்பட்டது. மறுபடியும் கேட்ட  எம்.ஜி.ஆர் இந்த முறையும் திருப்தி ஆகாமல் இளையராஜாவைப் பார்த்து இந்தப் பாடலை நீங்களே பாடிவிடுங்கள் என்றாராம்.

எஸ்.பி.பி தனது முதல் தமிழ் பாடலுக்கான சம்பளத்தை என்ன செய்தார் தெரியுமா?

அதற்கு இளையராஜா பெரிய பாடகர்கள் எல்லாம் பாடியிருக்கிறார்கள் எப்படி அதை நிராகரிப்பது என்று தயங்க எம்.ஜி.ஆர் அதை நான் பார்த்துக் கொள்கிறேன். நீ பாடிக் காட்டியது போல யாரும் பாடவில்லை எனவே அந்தப் பாடலை நீயே பாடிவிடு என்று சொல்லியதாக இளையராஜா நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பின்னர் இந்தப் படம் சில காரணங்களால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. எம்.ஜி.ஆர் இளையராஜா காம்பினேஷனும் திரையில் ஜொலிக்கத் தவறி விட்டது. மக்கள் திலகமும், இசைஞானியும் கடைசி வரை சேர முடியாமல் போனதுதுரதிஷ்டவசமானது தான்.