அதிக பொருட் செலவில் உருவான எம்ஜிஆரின் ஐந்து படங்கள் ஒரு பார்வை!

By Velmurugan

Published:

மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிப்பில் உருவாகும் ஒவ்வொரு திரைப்படத்திலும் பிரம்மாண்டத்திற்கு எந்த குறைவும் இருக்காது. கண்ணுக்கு விருந்தாக பல காட்சிகளை கொடுக்க வேண்டும் என்பதற்காக நடிகர் எம் ஜி ஆர் பல முயற்சிகளை தன் திரைப்படங்களில் கொண்டு வந்திருந்தார். அந்த வகையில் எம்ஜிஆர் நடிப்பில் பல படங்கள் அதிகப் பொருட்செலவில் உருவாகி இருந்தாலும் முதல் ஐந்து திரைப்படங்கள் குறித்த விபரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதலாவதாக நாம் பார்க்கும் திரைப்படம் அலிபாபாவும் 40 திருடர்களும். இந்த படம் 1956 இல் வெளிவந்த இந்த படத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் பி ஆர் சுந்தரம் படத்தை இயக்கியிருந்தார். மேலும் இந்த திரைப்படம் அரபு நாட்டு கதையை மையமாக வைத்து தழுவி எடுக்கப்பட்டிருந்தது. அந்த காலத்தில் இந்த திரைப்படம் அதிக பொருட்செலவில் உருவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் நடிகர் எம்ஜிஆர் உடன் இணைந்து பி.பானுமதி, கே. சாரங்கபாணி , பி.எஸ்.வீரப்பா , கே.ஏ.தங்கவேலு , எம்.என்.ராஜம் , சுசீலா, வித்யாவதி மற்றும் எம்.ஜி.சக்ரபாணி என பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர். மேலும் இந்த திரைப்படம் தென்னிந்தியாவின் முதல் முழு நீள வண்ணத் திரைப்படம் என பெருமையை பெற்றிருந்தது.

இரண்டாவது நாம் பார்க்கும் திரைப்படம் நாடோடி மன்னன். 1958 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த திரைப்படமாக உருவாகி இருந்தது. மேலும் இந்த திரைப்படத்தை நடிகர் எம் ஜி ஆர் தனது சொந்த தயாரிப்பில் தயாரித்து இயக்கி இருந்தார். இந்த படத்தில் நடிகர் எம் ஜி ஆர் உடன் இணைந்து பிஎஸ் வீரப்பா, நம்பியார், சக்கரபாணி என பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தின் ஒரு சிறப்பாக பி. பானுமதி , எம்.என்.ராஜம் மற்றும் பி. சரோஜாதேவி ஆகியோருடன் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். 1.8 மில்லியன் பட்ஜெட்டில் உருவாகி இருந்த நாடோடி மன்னன் திரைப்படத்தை எம்ஜிஆர் பிக்சர்ஸ் பேனரில் சக்ரபாணி மற்றும் ஆர்.எம்.வீரப்பனுடன் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படம் பாதி கருப்பு வெள்ளையாகவும் பாதி கலரிலும் எடுக்கப்பட்டு வெளியாகி இருந்தது.

பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி தோல்வியில் முடிந்த எம்ஜிஆரின் சில படங்கள்!

அடுத்து மூன்றாவதாக நாம் பார்க்கும் திரைப்படம் அன்பே வா. ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் ஏசி திரலோக சந்தர் இயக்கத்தில் 1966 ஆம் ஆண்டு அன்பே வா திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் நடிகர் எம்ஜிஆர் உடன் இணைந்து சரோஜாதேவி கதாநாயகியாக நடித்திருப்பார். பிரம்மாண்ட பொருட் செலவில் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியிருந்த இந்த திரைப்படத்தின் பல காட்சிகள் சிம்லாவில் படமாக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படம் 23 வாரங்களுக்கு மேலாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி மிகப்பெரிய வசூலை பற்றி வணிக ரீதியாக வெற்றி படமாக வலம் வந்தது.

நான்காவது நாம் பார்க்கும் திரைப்படம் அடிமைப்பெண். 1969 ஆம் ஆண்டு எம் ஜி ஆரின் பிரம்மாண்ட தயாரிப்பில் கே சங்கர் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் அடிமைப்பெண். இந்த படத்தில் நடிகர் எம் ஜி ஆர் மற்றும் நடிகை ஜெயலலிதா இருவரும் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் பாடல் காட்சிகள் ஜெய்ப்பூரில் படமாக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த பாடல் காட்சிகளுக்காக அதிக பொருட் செலவில் செலவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஐந்தாவதாக நாம் பார்க்கும் திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன். 1973 ல் வெளிவந்த படம் இந்த படத்தை எம்ஜிஆர் தயாரித்து இயக்கியிருந்தார். இந்த படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் எடுக்கப்பட்டது.இந்த படத்தில் நிறைய பாடல் காட்சிகள் மட்டும் இன்றி பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்திருந்ததால் இந்த படத்தின் பட்ஜெட் மிகப்பெரிய அளவில் அமைந்திருந்தது. மேலும் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த இந்த படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. எம்ஜிஆர் நடித்த படங்களில் மிக அதிக நாட்கள் ஓடிய முதலாவது படம் உலகம் சுற்றும் வாலிபன். இந்த ஐந்து படங்களும் எம்ஜிஆர் நடித்து அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படமாகும்.