இதயவீணை படப்பிடிப்பிற்காக மக்கள் திலகம் எம்ஜிஆர் காஷ்மீர் சென்று அங்குள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்தார். இதை அறிந்து இராணுவத்தினர் எம்.ஜி.ஆருக்கு வரவேற்பு விடுத்தனர். பின்னர் தங்களின் ராணுவ நலச்சங்கம் ஒன்றுக்கு வருகை தர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்கள். அவர்களின் வேண்டுகோளை எம்ஜிஆர் ஏற்றுக்கொண்டார். பொதுவாக எம்.ஜி.ஆர் எங்கு சென்றாலும் வெறுங்கையோடு செல்லும் பழக்கம் அவருக்கு இல்லை. ராணுவ நலச்சங்கத்திற்கு நிதி கொடுக்க முடிவு செய்தார். அவரிடம் அப்போது பணம் இல்லை. படத்தின் தயாரிப்பாளரிடமும் படப்பிடிப்பின் செலவுக்கு வைத்திருந்ததை தவிர பெரிதாக தொகை ஏதுமில்லை. அங்கு இருந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ஒரு பெரும் தொகையை குறிப்பிட்டு கடனாக கிடைக்குமா என்று எம்ஜிஆர் கேட்டார்.
எம்ஜிஆர் ஒருவரிடம் கடன் கேட்கிறார் என்றால் எவ்வளவு பெரிய விஷயம். தன்னிடம் இல்லாத போது தான் ஆரம்ப காலகட்டத்தில் நாடகத்தில் நடித்தபோது அவர் கடன் கேட்கிறார் என்றால் அவ்வளவு பெரிய விஷயமாக தெரியாது. ஆனால் இன்று செல்வாக்கு மிக்கவராக தமிழ் திரை உலகில் கொடிகட்டி பறக்கின்ற ஒருவராக இருக்கும் பொழுது அவர் கடன் கேட்கிறார் என்றால் அதை யாராலும் ஏற்க முடியாது. ஆனாலும் நம்பித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் கடன் கேட்டது உண்மைதான். தொழில் அதிபரிடம் விஷயத்தை சொன்னதும் அவர் அசந்து போய்விட்டார், உங்களுக்கு இல்லாததா.. தாராளமாக கொடுக்கிறேன் எவ்வளவு தேவை என்று கேட்டார். அதற்கு எம்ஜிஆர் அவர்கள் கணிசமான ஒரு தொகையை கடன் கேட்டார். எம்ஜிஆர் கடன் வாங்கி இவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாக கொடுக்கிறாரே என்று நினைத்தார் அந்தத் தொழில் அதிபர்.
உடனே தன் மன எண்ணத்தை எம்ஜிஆர் இடமும் சொன்னார் தவறாக நினைக்காதீர்கள், ராணுவத்தினர் விரும்பி உங்களை அழைக்கிறார்கள் ஏதாவது தொகை கொடுக்க வேண்டும் என்றால் கொடுங்கள். ஆனால் இவ்வளவு பெரிய தொகை வழங்குவது தேவையா என்ற கேட்டுள்ளார். சட்டென்று எம்.ஜி.ஆருக்கு கோபம் வந்துவிட்டது. நீங்களும் நானும் சென்னையில் இருந்து லட்சம் லட்சமாக சம்பாதித்துக் கொண்டு பாதுகாப்பாக இருப்பதற்கு நாட்டை பாதுகாக்கும் இந்த ராணுவத்தினர் தான் காரணம். அவர்களது உழைப்புக்கும் தியாகத்துக்கும் இந்த தொகை மிகவும் சிறியது. முதலில் பணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் சென்னை திரும்பியதும் தருகிறேன் என்று அதிபரிடம் சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர் வேகமாக சென்றுவிட்டார்.
பிறகு தொழில் அதிபர் ஏற்பாடு செய்து கொடுத்த தொகையை ராணுவ நலச் சங்கத்துக்கு நன்கொடையாக எம்ஜிஆர் வழங்கினார்.இதை எதிர்பார்க்காத ராணுவத்தினர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்து எம்ஜிஆர்க்கு நன்றி தெரிவித்தனர். இது மட்டுமின்றி காஷ்மீரில் ஜில்லென்று மற்றொரு சம்பவமும் நடந்துள்ளது. நடிகர் எம்ஜிஆர் தங்கி இருந்த பிரபல ஹோட்டலில் அவரது உதவியாளர்களும் உடன் தங்கியிருந்தனர். அப்பொழுது எம்ஜிஆரின் உதவியாளர்கள் இரவு சாப்பாடு சாப்பிட்டு முடித்ததும் ஹோட்டலில் மிகச் சிறப்பான ஐஸ்கிரீம்கள் குறித்து விசாரித்து கொண்டிருந்தனர். வித விதமான ஐஸ்கிரீம்களின் பெயர்களை கேட்டதும் அவர்களுக்கு ஆசை வர விலைப்பட்டியலை கேட்டது சற்று மிரண்டுள்ளனர்.
மறுநாள் படப்பிடிப்பு முடிந்ததும் தங்கள் அறையில் எம்ஜிஆரின் உதவியாளர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்கள் இருந்த அறையில் அழைப்பு மணி கொடுக்க வெளியே சென்று பார்த்து இருக்கின்றனர். ஒரு தட்டு நிறைய பலவிதமான ஐஸ்கிரீம்கள் அதில் இருந்தது. வேறு எந்த அறைக்கோ செல்ல வேண்டிய ஐஸ்கிரீம் தட்டு நம் அறைக்கு வந்திருக்குமோ என முதலில் உதவியாளர்கள் குழப்பத்தில் இருந்தனர். அதன் பின் வந்த வரைக்கும் லாபம் என நினைத்து ஐஸ்கிரீம் தட்டை முழுவதும் காலி செய்துள்ளனர்.
மறுநாள் காலை படப்பிடிப்பில் உதவியாளர்களை பார்த்து எம்ஜிஆர் கேட்ட முதல் கேள்வி நேற்று இரவு ஐஸ்கிரீம் அனுப்பினேனே சாப்பிட்டீர்களா என்று கேட்டுள்ளார். உதவியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் குழப்பம் இருந்துள்ளது. நன்றாக இருந்தது என தயக்கத்துடன் கூறி வந்துள்ளனர். இதில் மறைந்திருக்கும் விஷயம் என்னவென்றால் ஹோட்டல் உதவியாளர்களை அழைத்து தன்னுடன் வந்தவர்கள் உங்களிடம் என்ன விசாரித்தார் என கேட்டறிந்து கொண்டார் எம்ஜிஆர். அதன் பின் உதவியாளர்களின் விருப்பத்தையும் நிறைவேற்றியுள்ளார்.