புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்து இயக்கிய பிரம்மாண்டமான படம் நாடோடி மன்னன். ரசிக பெருமக்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. இந்தப் படத்தில் வரும் வசனங்கள் தற்காலத்துக்கும் பொருந்தக்கூடியதாக உள்ளன.
இந்த வெற்றியைத் தொடர்ந்து கல்கியின் காவிய படைப்பான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கத் திட்டமிட்டு இருந்தார். இதற்காக எம்ஜிஆர் 1958ம் ஆண்டிலேயே 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து படத்தின் படப்பிடிப்பு உரிமையை ஆசிரியரின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வாங்கினார்.

எம்ஜிஆர் இந்தப் படத்திற்காக எஸ்.எம்.சுப்பையா நாயுடுவை இசை அமைக்கவும், ஒளிப்பதிவுக்கு ஜி.கே.ராமுவையும் தேர்ந்தெடுத்தார். அதற்கான விளம்பரம் கூட அன்றைய நாளிதழ்களில் வெளியானது.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வந்தியத்தேவன் மற்றும் அருள்மொழி வர்மன் என இரட்டை வேடங்களில் படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியானது. அதே நேரம் இன்னொரு வதந்தியும் பரவியது. அப்போது எம்ஜிஆரும், சிவாஜியும் புகழின் உச்சத்தில் இருந்தனர். அவர்கள் இருவரும் இணைந்து நடித்த படம் கூண்டுக்கிளி. இது 1954ல் வெளியானது.
இரு நாயகர்களின் ரசிகர்களுக்குள் கலகலப்பு ஏற்படவே அதன்பின் இருவரும் இணைந்து படத்தில் நடிக்காமலேயே இருந்தனர். அதன்பிறகு இந்தப் படத்திற்காக சிவாஜியுடன் இணைந்து நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியானது. அதன்படி வந்தியத்தேவனாக எம்ஜிஆரும், அருள்மொழி வர்மனாக ஜெமினிகணேசனும், ஆதித்ய கரிகாலனாக சிவாஜியும் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

இது மட்டும் நடந்து இருந்தால் அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய வசூல் சாதனையை இந்தப் படம் நடத்தியிருக்கும். அதே நேரம் எம்ஜிஆருக்கு இது ஒரு பெரிய திருப்புமுனையைத் தந்த படமாகவும் அமைந்து இருக்கும்.
ஆனால் என்ன காரணத்தாலோ இந்தப் படத்தைத் தொடங்கவே முடியவில்லை. துரதிருஷ்டவசமாக இந்தப் படத்தைத் தொடங்க முடியவில்லை என்றே கூறப்படுகிறது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மட்டும் இந்தப் படத்தை அப்போதே எடுத்து இருந்தால் அது அவரது கனவுத் திட்டமாகவும், லட்சியப்படமாகவும் இருந்து இருக்கும். எம்ஜிஆர் மட்டும் இந்தப் படத்தில் நடித்து இருந்தால் இந்தப் படமே வேற லெவலில் இருந்து இருக்கும்.
இந்தப் படத்திற்கு எம்ஜிஆரின் வேண்டுகோளின்படி திரைக்கதையை எழுதியவர் அலெக்சாண்டர் என்ற மாணவன். இவர் காரைக்குடி அழகப்பா பல்கலையில் படித்தவர். பின்னாளில் நிருபரானதும் எம்ஜிஆரை சந்திக்கச் சென்றார். அப்போது தம்பி நீதானே காரைக்குடி அழகப்பா கல்லூரியில் என்னிடம் கேள்வி கேட்டாய் என்றார்.
அதன் பிறகு நீ அந்த வேலையை விட்டுவிட்டு என் வீட்டு மாடியில் தங்கி இந்தக் கதைக்குத் திரைக்கதை எழுது என ஒரு புத்தகத்தை எடுத்துக் கொடுத்தார். அதுதான் பொன்னியின் செல்வன். அவரும் எழுதி முடித்தார். அவர் தான் பிற்காலத்தில் மகேந்திரன் என்ற பெரும் இயக்குனரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகநாயகன் கமலும் பொன்னியின் செல்வன் காவியத்தைத் திரைப்படமாக எடுக்கத் திட்டமிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


