மக்கள் திலகம், புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல் என்றால் சட்டென்று நம் நினைவுக்கு வருபவர் எம்ஜிஆர். இவர் நடிகர் மட்டுமல்ல. சிறந்த இயக்குனர். சினிமாவில் உள்ள அத்தனை விஷயங்களையும், தொழில்நுட்பம் உள்பட அனைத்திலும் வல்லவர்.
உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் இயக்குனர் இவர் தான். படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. காட்சிகளைப் படமாக்கிய விதம் அற்புதம். உதாரணத்திற்கு இந்தப் படத்தில் பல காட்சிகளைச் சொல்லலாம். தாய்லாந்து நாட்டில் உள்ள துஸித்தானி ஓட்டல் மிகவும் பிரபலம். இதன் பிரம்மாண்ட அழகைக் காணக் கண்கோடி வேண்டும்.
இதை நம்மூரு ரசிகர்களும் காண வேண்டும் என்ற ஆவலில் ஓட்டலை ரசித்து ரசித்துக் காட்சிப்படுத்தி இருப்பார். ஓட்டலின் உள்ளே அத்தனை வேலைப்பாடுகளும் ரசிக்கத்தக்கவை. நடிகை மேட்டா ஓடிவரும் காட்சி, எம்ஜிஆர் வெல்வெட் பாதையில் நடக்கும் காட்சி, வராண்டாவைத் தாண்டினால் அங்கு சந்திரகலாவும், நாகேஷூம் இருக்கும் காட்சி, நீச்சல்குளம், நீரூற்றுகள் என அத்தனை அழகையும் படத்தில் ரம்மியமாகக் காட்டி இருப்பார் எம்ஜிஆர்.
ஊருக்கு உழைப்பவன் படத்தில் ஒரு பாடல் காட்சி. அழகெனும் ஓவியம் இங்கே… என்ற அந்தப் பாடலில் ஓடி வருவார். நம்மை நோக்கித்தான் வருகிறார்னு பார்த்தா அப்புறம் தான் தெரியுது அவர் வெண்ணிற ஆடை நிர்மலாவை நோக்கிச் செல்கிறார் என்று. அதே சமயம் முதலில் நம்மை நோக்கி ஓடி வருவது போன்ற காட்சி பெரிய கண்ணாடியில் படமாக்கப்பட்டுள்ள பிம்பம். அதுல என்ன விசேஷம்னா கேமரா தெரியாத படி அதை எடுத்திருப்பார்.
அதே போல அடிமைப்பெண் படத்தில் ‘தாயில்லாமல் நான் இல்லை’ பாடல் காட்சி. அதுல ஒகேனக்கல் பாறையில் உட்கார்ந்து இருப்பார். தண்ணீர் பாய்ந்து ஓடும். நடுவில் எம்ஜிஆர் இருப்பார். 100 அடிக்கு ஆள்கள் யாரும் கிடையாது. லாங் ஷாட்ல அந்தக் காட்சியை எடுத்திருப்பார்.
அதே மாதிரி இன்னொரு சீன். அதே பாடலில் தாய்ப்பறவை குஞ்சுகளுக்கு இரை ஊட்டும். அதுபோன்ற காட்சியைக் காத்திருந்து படம் ஆக்கி இருப்பார் எம்ஜிஆர். அப்படிப்பட்ட ரசனை மிகுந்தவர் எம்ஜிஆர் என்றால் அதை யாராலும் மறுக்க முடியாது.
எம்ஜிஆர் நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என 3 முத்தான படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் பொன்னியின் செல்வன் கூட அவரது கனவுப்படமாகத் தான் இருந்தது. ஆனால் சில பல காரணங்களால் அது கைகூடாமல் போய்விட்டது.