கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் பல காட்சிகளில் ஸ்லோமோஷன் ஷாட்டை வைத்து ரஜினியை நடக்க வைத்தே படத்தை ஹிட்டாக்கினார். குறிப்பாக பிளாஷ்பேக் காட்சிகளில் டைகர் முத்துவேல் பாண்டியனாக ரஜினி மிக கண்டிப்பான ஜெயிலராக வரும் காட்சிகள் தியேட்டரையே அலற வைத்தது. இதே பாணியை 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தான் நடித்த படம் ஒன்றில் அப்போதே சம்பவம் செய்திருக்கிறார்.
எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த இதயவீணை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அதே நிறுவனம் இன்னொரு படம் ஒன்றைத் தயாரிக்கத் திட்டமிட்டது. அதன்படி இந்தியில் சாந்தாராம் இயக்கிய தோ ஹாங்கி பாராத் என்ற படத்தினை ரீமேக் செய்யும் எண்ணம் வர அதனை எம்.ஜி.ஆருக்கு போட்டுக் காட்டியிருக்கிறார்கள். அந்தப் படத்தில் ஜெயிலர் ஒருவர் கைதிகளைத் திருத்தும் முயற்சியில் ஈடுபட ஆனால் அந்தக் கைதிகள் அவரைக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விடுகின்றனர். இதுதான் கதை.
ஆனால் எம்.ஜி.ஆருக்கோ கிளைமேக்ஸ் காட்சியில் உடன்பாடு இல்லை. ஏனெனில் கைதிகள் திருந்துவதாக கதை இருக்க வேண்டும். எனது படம் தீயவற்றை ஊக்குவிக்கக் கூடாது. கிளைமேக்ஸ்-ஐ மாற்றுவதாக இருந்தால் சொல்லுங்கள் நடிக்கிறேன் என்று எம்.ஜி.ஆர் கண்டிஷன் போட தயாரிப்பு நிறுவனம் ஒப்புக் கொண்டது.
‘கூல் அக்கா’ வாக வந்த கூல் சுரேஷ்.. பெண் வேடமிட்டு கலந்து கொண்ட நிகழ்ச்சி.. வைரலாகும் வீடியோ..,
அதன்பின் இந்தி இயக்குநர் சாந்தாராமின் அனுமதி பெற்று எம்.ஜி.ஆர் சொன்ன திருத்தங்களையும் சேர்த்து உருவான படம் தான் பல்லாண்டு வாழ்க. 1975-ல் வெளியான இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர் ஜெயிலராகவும், கைதிகளைத் திருத்துபவராகவும் நடித்திருப்பார். இப்படத்தினை இயக்கியவர் கே.சங்கர். கொடூர வில்லன்களாக பி.எஸ்.வீரப்பா, நம்பியார், ஆர்.எஸ்.மனோகர் ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் எம்.ஜி.ஆரின் அடிக்கடி முழங்கும் கொள்கைப் பாடலான ஒன்றே குலமென்று பாடுவோம் என்ற பாடலும் இதில் இடம்பெற்றது. புலமைப்பித்தன் வரிகளில் கே.ஜே.யேசுதாஸ் இப்பாடலைப் பாடியிருப்பார். இப்போதுள்ள ஜெயிலருக்கு முன்னோடியாக பல்லாண்டு வாழ்க திரைப்படம் விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.