ஆயிரம் திரை கண்ட ஆச்சி என்று தமிழ்த்திரை உலகில் போற்றப்படுபவர் நடிகை மனோரமா. இவர் ஆரம்பத்தில் காமெடி ரோல்களில் நடித்து பின்னாளில் குணச்சித்திர வேடங்களில் கலக்கினார். சொந்த வாழ்க்கையில் ஆயிரம் சோகங்கள் இருந்தாலும் சினிமா உலகில் அனைவரையும் சிரிக்க வைத்தவர். இவர் தன் வாழ்க்கையின் பாதை மாறக்காரணமாக இருந்தவர்கள் பற்றி இங்கு குறிப்பிடுகிறார். பார்க்கலாமா…
தமிழ்சினிமா உலகிலே 1500 திரைப்படங்களுக்கு மேல் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து மிகப்பெரிய சாதனையைப் புரிந்தவர் மனோரமா. என்னோட வாழ்க்கையில மறக்க முடியாத ரெண்டு பேருன்னா அது எஸ்.எஸ்.ராஜேந்திரனும், கவியரசர் கண்ணதாசனும் என்று மனோரமா ஒரு பத்திரிகைப் பேட்டியில் பதிவு செய்துள்ளார்.
என் வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனைகளை எல்லாம் சந்தித்த பிறகு தனி ஒரு பெண்ணாக சென்னைக்கு வந்து தன்னம்பிக்கையோடு வாழ்க்கை நடத்தணும்னு நான் ஆசைப்பட்டேன். அதுக்கு உதவி செய்த எஸ்எஸ்.ராஜேந்திரன் அண்ணனை என் ஜென்மத்துக்கும் மறக்க முடியாது.
கடுகு மாதிரி இருக்குற கிராமத்துலயே ஒரு பெண் வாழ்றது சிரமம்னா கடல் மாதிரி இருக்குற சென்னையில வாழணும்னா எவ்வளவு கஷ்டம்? என் உடன்பிறப்பு மாதிரி என்னைப் பார்த்துக் கொண்டார் எஸ்எஸ்.ராஜேந்திரன் அண்ணன். வாழ்க்கை முழுக்க வலிகளையே சுமந்த எனக்கு காமெடி ரோல் தந்து அதுதான் பொருத்தமானது என புரிய வைத்தவர் கவியரசர் கண்ணதாசன்.
நாடகத்துல ஹீரோயினா நடிச்சிட்டு சினிமாவுல காமெடி வேஷம் நடிக்கிறோமே என நான் பலநாள் வேதனைப்பட்டு இருக்கேன். அதுக்குப் பின்னால யோசித்துப் பார்த்த போதுதான் தெரிந்தது. என் கூட கதாநாயகியா நடிச்சவங்க பின்னால யாரையுமே என்னால பார்க்க முடியல.
ஆனா நான் 4 தலைமுறைகளாகத் தொடர்கிறேன் என்றால் அதுக்கு முக்கியமான காரணம் என்னோட பாதையை மாற்றி விட்ட கவியரசர் கண்ணதாசன்தான் என்று நன்றியோடு ஒரு பத்திரிகைப் பேட்டியில் மனோரமா பதிவு செய்துள்ளார். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



