Vaali and Gangai Amaran Song : தமிழ் சினிமா மட்டுமில்லாமல் எந்த மொழி திரைப்படமாக இருந்தாலும் அவை உருவாகும் போது அதற்குள் நிச்சயம் ஏராளமான சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறி இருக்கும். அந்த வகையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான மங்காத்தா படத்தில் நடந்த ஒரு சிறப்பான சம்பவம் பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம்.
அஜித் குமார் நடிப்பில் இதுவரை ஐம்பதுக்கு மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதில் 50 வதாக அவர் நடித்த மங்காத்தா திரைப்படம், பலரின் பேவரைட்டாக உள்ளது. ஒரு வில்லனாக அதுவும் எந்தவித பதற்றமும் இல்லாமல் மிக கூலாக அஜித் குமார் எதிர்கொண்ட விநாயக் கதாபாத்திரம், வெங்கட் பிரபு இயக்கிய படங்களிலும் முக்கிய இடத்தை பிடிக்க உதவி இருந்தது.
யுவனின் பிடிவாதம்
மேலும் யுவன் ஷங்கர் ராஜா இசையில் பின்னணி மற்றும் பாடல்கள் பலரின் பூஸ்ட் ஆகவும் இருந்து வருகிறது. இதனிடையே, மங்காத்தா படத்தில் வரும் வாடா பின்லேடா என்ற பாடலை வாலி எழுதிய பின்னர் நடந்த மாற்றத்தை பற்றி அதனை பாடிய பாடகர் க்ரிஷ் சில கருத்துக்களை ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
“வாடா பின்லேடா என்ற பாடல், நான் மங்காத்தா படத்திற்காக பாடி இருந்தேன். அப்போது அதன் கடைசி பல்லவி ஆண் குரலில் தான் வேண்டும். பெண் குரலில் வேண்டாம் என யுவன் ஷங்கர் ராஜா பிடிவாதம் பிடித்தார். ஏனென்றால் அஜித் குரலில் முடியும் போது தான் பாடல் நன்றாக இருக்கும் என்பதும் யுவனின் விருப்பம்.
கோபத்தில் கத்திய வாலி
இதனால், இரவு 9 மணிக்கு பாடல் வரிகளை கேட்டு வாலி அங்கிளை அழைக்கும்படி யுவன் ஷங்கர் ராஜாவும், வெங்கட் பிரபுவும் என்னிடம் கூறினார்கள். இரவு 8 மணிக்கு யாராவது அழைத்தாலே வாலி அங்கிள் கத்துவார். ஆனால், அவர்கள் இருவரும் வற்புறுத்தியதால் நானும் 9 மணிக்கு வாலி அங்கிளை அழைத்து விட்டேன்.
போன் எடுத்ததும், ‘என்ன மணின்னு நீ நெனச்சுட்டு இருக்கே’ என கோபத்தில் கேட்டார். அதன் பின்னர் பல்லவி மட்டும் வேண்டுமென என்னை அழைக்க சொன்ன விவரத்தை கூறினேன். ஆனால், வாலியோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருப்பதாக கூறினார். மேலும், ‘கங்கை அமரனுக்கு வாடா பின்லேடா வரிகளை அனுப்பி விட்டால் கடைசி பல்லவியை அவன் எழுதி விடுவான்’ என வாலி கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார்.
இதன் பின்னர் தனது தந்தை கங்கை அமரனுக்கு அழைத்து வெங்கட் பிரபு விவரத்தை சொல்லி, வாலி எழுதிய வரிகளையும் கூறினார். அந்த பாடலின் கடைசி பல்லவியை எழுதியது கங்கை அமரன் சார் தான். இப்படி ஒரே பாடலில் கங்கை அமரன் மற்றும் வாலி என இரண்டு ஜாம்பவான்கள் எழுதி இருந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்” என பாடகர் கிரிஷ் தெரிவித்துள்ளார்.