நடிகர் விஜய் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கோட் திரைப்படம் வெளியாகி இருந்தது. பீஸ்ட், வாரிசு, லியோ என இதற்கு முன்பு விஜய் நடித்த திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், கோட் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பும் இருந்து வந்தது. அது மட்டுமில்லாமல் மங்காத்தா, மாநாடு, சென்னை 28, சரோஜா என பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி உள்ள வெங்கட் பிரபு, கோட் படத்தை இயக்கியது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகப்படுத்தி இருந்தது.
தனது திரைப்படங்களில் எப்போதுமே மிக ஜாலியாக அதே நேரத்தில் தேவையான சுவாரஸ்யங்கள் நிறைந்த காட்சிகளுடன் இயக்கும் வெங்கட் பிரபு கோட் திரைப்படத்திலும் அதே மேஜிக்கை செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் படத்தின் டிரைலர் பெரிய அளவில் ரசிகர்கள் நம்பிக்கை காப்பாற்றி இருந்தது.
ஆனால் அதே வேளையில் கோட் திரைப்படம் வெளியானதன் பின்னர் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. ஒரு சிலர் படத்தில் நிறைய ரெஃபரென்ஸ் பயன்படுத்தியது சுவாரஸ்யமாக இருந்ததாகவும், ஆனால் அதே நேரத்தில் இன்னொரு பக்கம் படம் அதிக நேரம் இருந்தது ஒரு மைனஸாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.
விமர்சனங்கள் எப்படியாக இருந்தாலும் வசூல் ரீதியாக கோட் திரைப்படம் பல சாதனைகளை முறியடித்து வருகிறது என்பதுதான் உண்மை. அதேபோல இன்னொரு சம்பவமாக கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய் ரஜினிகாந்தின் வசனம், கமல்ஹாசனின் பாடல், அஜித்தின் ரிஃபெரன்ஸ், சூர்யாவின் ரிபெரன்ஸ் என மற்ற நடிகர்களை எந்த ஈகோவும் இல்லாமல் பயன்படுத்தி இருந்தார் என்றும் அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
மற்ற எந்த நடிகராலும் இது நிச்சயம் முடியாது என்றும் விஜய்யால் மட்டும் தான் இப்படி எல்லாம் மற்ற நடிகர்களுக்கு இடம் கொடுக்க முடியும் என்றும் குறிப்பிட்ட நிலையில் நடிகர் அஜித் குமார் இதனை 13 ஆண்டுகளுக்கு முன்பே செய்துவிட்டார் என அவரது ரசிகர்கள் சில ஆதாரத்துடன் தெரிவித்து வருகின்றனர்.
இதே வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த மங்காத்தா திரைப்படத்தில் சூர்யாவின் சஞ்சய் ராமசாமி கதாபாத்திரத்தை பற்றி ஒரு வசனத்தை அஜித் பேசியிருப்பார். மேலும் அந்த படத்தின் ஒரு காட்சியில் திரையரங்கில் விஜய்யின் காவலன் திரைப்படம் ஓடும் காட்சியும் வரும். இதனைத் தாண்டி அஜித்குமார் ஒரு இடத்தில் ‘நான் என்ன சந்தானமா காமெடி செய்ய’ என கேட்பதும், சிஎஸ்கே ரசிகராக பிரேம்ஜி வலம் வருவதும், இவற்றைத் தாண்டி எந்திரன் படத்தில் ரஜினி பேசும் பிளாக் ஷீப் என்ற வசனத்தை பிரேம்ஜி பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
விஜய் மற்ற நடிகர்கள் ரெபரன்ஸை ஈகோ இல்லாமல் பயன்படுத்துவதை பெருமையாக குறிப்பிட்டு வரும் நிலையில் அஜித் ரசிகர்கள் மங்காத்தா படத்தில் அவர் ஈகோ இல்லாமல் செய்திருப்பார் என்றும் தெரிவித்து வருகின்றனர்.