மணிரத்னம் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து விட்டால் ஒரு நடிப்பு பல்கலைக்கழகத்தில் ஒரு பட்டம் முடித்த அனுபவம் கிடைக்கும் என்று அவரது படத்தில் நடித்த பலர் கூறுவார்கள். அந்த வகையில் அவரது படத்தில் நடித்த பிறகுதான் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியவர்களின் நடிப்பு ஸ்டைல் மாறியது என்றும் கூறுவதுண்டு.
கமல்ஹாசனுக்கு ’நாயகன்’ ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் ’தளபதி’ திரைப்படம் ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம். இந்த நிலையில் மணிரத்னத்தால் ஒரு கல்லையும் நடிக்க வைக்க முடியும் என்று கூறிய நிலையில் இரண்டு வயது குழந்தையை நடிக்க வைத்தார். அதுமட்டுமின்றி மனவளர்ச்சி குன்றிய கேரக்டரில் நடிக்க வைத்தார் என்பதுதான் மிகப்பெரிய ஆச்சரியம்.
இயக்குனர் மணிரத்னம் ’அஞ்சலி’ என்ற படத்தின் கதையை எழுதி முடித்த பின்னர் இரண்டு வயது மனவளர்ச்சி குன்றிய குழந்தையாக யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசனை செய்தார். பல வாரங்களாக அவர் யோசனை செய்து பல குழந்தைகளை பார்த்த பின்னர் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை என தெரிகிறது. அப்போது தான் அவருக்கு நடிகை ஷாலினி தனது தங்கை ஷாமிலி உடன் இருக்கும் புகைப்படத்தை பொங்கல் வாழ்த்தாக மணிரத்னம் அவர்களுக்கு அனுப்பி இருந்தார். அந்த புகைப்படத்தை பார்த்தவுடன் இந்த படத்தில் நடிக்கும் குழந்தை நட்சத்திரம் என்பதை முடிவு செய்துவிட்டார். அதன் பிறகு அவருடைய பெற்றோரிடம் பேசி நடிக்க வைத்தார்.
இரண்டு வயது குழந்தையை நடிக்க வைப்பது அதிலும் மனவளர்ச்சி குழந்தையாக நடிக்க வைப்பது என்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது என்று அவர் பல பேட்டிகளில் கூறியுள்ளார். குறிப்பாக அவர் சென்னையில் பிரபலம் ஒருவர் நடத்தி வந்த மனவளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்கான பள்ளிக்கு அடிக்கடி சென்று அந்த குழந்தைகளிடம் பழகி உள்ளார். அவர்களது நடை, உடை, பாவனை, அவர்கள் பேசும் ஸ்டைல், பாடி லாங்குவேஜ் எல்லாவற்றையும் அங்கிருந்து தான் அவர் கற்றுக் கொண்டார். மேலும் குழந்தைகளின் பெற்றோரை சந்தித்த போது அவருக்கு ஏகப்பட்ட காட்சிகள் கிடைத்தது.
இதையடுத்து தான் ‘அஞ்சலி’ என்ற திரைப்படத்தை கடந்த 1990 ஆம் ஆண்டு இயக்கினார். ரகுவரன் மற்றும் ரேவதி முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தாலும் அஞ்சலி பாப்பா தான் இந்த படத்தின் கதையில் ஹைலைட். அந்த குழந்தையை சுற்றி தான் இந்த படத்தின் கதை நகரும். ஷாமிலி இரண்டு வயதே ஆன நிலையில் இயக்குனர் சொன்னதை புரிந்து கொண்டு மிக அருமையாக நடித்திருப்பார். அவருடைய பெற்றோர்களும் அவருக்கு உதவி செய்ததாக கூறப்படுவதுண்டு.
இந்த படம் ஷாமிலிக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற தேசிய விருது பெற்றுக் கொடுத்தது என்பதும் அதேபோல் தமிழக அரசும் ஷாமிலிக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருதை கொடுத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மணிரத்னத்தின் சகோதரர் ஜி வெங்கடேஸ்வரன் தயாரிப்பில் உருவான இந்த படம் 1990 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி வெளியானது. ஆரம்பத்தில் இந்த படம் வெளிச்சம் குறைவாக இருக்கிறது, முழுக்க முழுக்க இருட்டில் எடுக்கப்பட்டுள்ளது என்று விமர்சனம் எழுந்தாலும் ஒவ்வொரு காட்சியையும் மணிரத்னம் ரசித்து ரசித்து எடுத்ததால் ரசிகர்கள் பின்னாளில் கொண்டாடினர்.
இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன் வசூலையும் அள்ளியது. குறிப்பாக இந்த படத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான ஏழு பாடல்கள் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இந்த படம் ரிலீசாகி அங்கும் இந்த படம் வசூலை அள்ளி இருந்தது. மொத்தத்தில் தன்னால் ஒரு இரண்டு வயது குழந்தையை கூட நடிக்க வைத்து தேசிய விருதையும் பெற்றுக் கொடுக்க முடியும் என்று மணிரத்னம் நிரூபித்தது இந்த படத்தில் தான்.