மீண்டும் கல்லா கட்டிய சந்திரமுகி ஒரிஜினல் வெர்ஷன்.. 31 ஆண்டுகளுக்குப் பிறகு குறையாத அதே மவுசு

By John A

Published:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி. வாசு இயக்கத்தில் 2005-ல் வெளியான திரைப்படம் தான் சந்திரமுகி. ரஜினிக்கு கம்பேக் கொடுத்து கிட்டத்தட்ட 800 நாட்கள் ஓடி இமாலய சாதனை படைத்தது சந்திரமுகி. ஆனால் இந்தப் படத்தின் கதை பழைய மலையாளப் படத்தின் தழுவல் என்பது நிறைய பேருக்குத் தெரியாது. மலையாளத்தில் இயக்குநர் பாசில் இயக்கத்தில் 1993-ல் மோகன் லால், சுரேஷ் கோபி, ஷோபனா ஆகியோரது நடிப்பில் வெளியாகி பெரும் ஹிட் அடித்த திரைப்படமான மணிசித்ரதாழ் படத்தினைத் தழுவி எடுக்கப்பட்டதே சந்திரமுகி திரைப்படம்.

மலையாள சினிமாவின் மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்றான மணிசித்ரதாழ் பல விருதுகளை வாரிக் குவித்தது. சிறந்த நடிகைக்கான தேசிய விருதினையும் பெற்றது. கேரளத்தில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இந்தக் கதையை பாசிலுடன் பிரியதர்ஷன், சிபி மலையில் போன்ற ஜாம்பவான்கள் இணைந்து இயக்கினார்கள்.

நடிப்புன்னா எப்படி இருக்கணும் தெரியுமா? தேசிய விருது பெற்ற நித்யாமேனன் பளீச்

இந்தக் கதையை கன்னடத்தில் ஆப்தமித்ரா என்ற பெயரில் பி.வாசு இயக்கி வெற்றி கண்டார். மீண்டும் அதை அப்படியே தமிழுக்கு எடுத்து வந்து சந்திரமுகி என்ற பெயரில் இயக்கி வரலாற்று வெற்றியைப் பெற்றார். ஆனால் முறைப்படி இயக்குநர் பாசிலிடம் அனுமதி பெறாமல் இயக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. பி.வாசு இயக்கிய கதை வேறு என்று சொல்லப்பட்டாலும் இறுதியில் பாசிலுக்கு ராயல்டி கொடுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு ராகவா லாரன்ஸ் நடிப்பில் ரிலீஸ் ஆன சந்திரமுகி 2 எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

தற்போது இந்த மணிச்சித்ரதாழ் திரைப்படம் கேரளாவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இத்திரைப்படம் திரையிடப்பட்டிருப்பதால் ரசிகர்கள் இந்தப் படத்தினை மீண்டும் வெற்றிப் படமாக்கியுள்ளனர். கடந்த இரு தினங்களில் மட்டும் இப்படம் சுமார் 1.10 கோடி வசூலித்துள்ளது. மலையாளத்தில் புதிய படங்களே 25 கோடிகளைக் கடந்தாலே என்ற நிலையில் ரீ-ரிலீஸில் மணிச்சித்ரதாழ் கல்லா கட்டி வருகிறது.

தமிழ் சினிமாவில் கில்லி, வாலி என அடுத்தடுத்து ரீ-ரீலீஸ் செய்யப்பட்டு மீண்டும் வசூல் மழையில் நனையும் வேளையில் கேரளாவிலும் இந்த டிரெண்ட் உருவாகியுள்ளது குறப்பிடத்தக்கது.