தமிழ் சினிமாவில் 1990களின் பிற்பகுதியில் நாட்டாமை, ஜமீன், பஞ்சாயத்து தலைவர் , ஊர்த்தலைவர், படங்கள் டிரெண்டிங்கில் இருந்த நேரம். இதனைப் பயன்படுத்தி முன்னணி நடிகர்களான ரஜினியும் கமலும் நடித்த படங்கள் தான் தேவர் மகனும், எஜமானும். அதேபோல் விஜயகாந்துக்கு சின்னக் கவுண்டர் படமும். இந்தப் படங்கள் அனைத்து பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றியைப் பெற்றது.
இதில் எஜமான், சின்னக் கவுண்டர் படங்களை இயக்கியது இயக்குநர் ஆர்.வி. உதயக்குமார். சின்னக் கவுண்டர் படத்தில் அனைத்து பாடல்களையும் இவரே எழுதியிருந்தார். இளையராஜாவின் இசையில் இப்பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனது. அதேபோல் எஜமான் படத்திற்கும் இவர் பாடல்களை எழுதியிருந்தார். ஒரே ஊர்க்காரர்களான இளையராஜாவும், இயக்குநர் ஆர்.வி உதயக்குமாரும் மீண்டும் எஜமான் படம் மூலம் இணைந்தனர்.
ஏ.வி.எம் தயாரிப்பில் 1993-ல் வெளியான எஜமான் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனது. பாடல்களும் பிரபலமாக இன்றுவரை ஒலித்து வருகிறது. சின்னக் கவுண்டர் படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியது போல எஜமான் படத்திற்கும் அனைத்துப் பாடல்களையும் ஆர்.வி. உதயக்குமார் எழுதியிருக்கிறார்.
ஆனால் இந்தமுறை ஆர்.வி.உதயக்குமார் எழுதிய பாடல்களில் திருப்தி அடையாத இளையராஜா அதனை அப்போது ஏ.வி.எம். ஸ்டுடியோவில் வேறு ஒரு திரைப்படத்திற்காக இருந்த வாலியிடம் சென்று இளையராஜாவும், ஏவிஎம் சரவணனும் இந்தப் பாடல்களைச் சரிசெய்து தாருங்கள் என்று கேட்டுள்ளனர்.
அதன்படி ஆர்.வி. உதயக்குமார் எழுதிய அனைத்துப் பாடல்களையுமே வாலி தன் கைவண்ணத்தால் மீண்டும் மெருகேற்றி இளையராஜாவுக்குக் கொடுத்துள்ளார். இந்த முறை திருப்தி அடைந்த இளையராஜா பின்னர் அனைத்துப் பாடல்களையும் பதிவு செய்துள்ளார்.
மேலும் தக்க சமயத்தில் உதவி செய்து இத்தனை பாடல்களைத் திருத்திய நீங்கள் இந்தப் படத்தில் மேலும் ஒரு பாடலை நீங்கள் தனியாக எழுதினால் நன்றாக இருக்கும் என்று இளையராஜா கேட்டுக்கொண்டதற்கிணங்க ‘அடி ராக்குமுத்து ராக்கு..‘ என்ற பாடலை எழுதி ஹிட் கொடுத்திருக்கிறார் வாலி. இந்தத் தகவலை வாலி 1000 என்ற நிகழ்ச்சியில் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். இவ்வாறு பல படங்களின் வெற்றிக்கு தனது வரிகளால் அழகு சேர்த்திருக்கிறார் வாலிபக் கவிஞர்.