ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ் பாஸ்கர் நடித்திருக்கும் படம் பார்க்கிங். இந்தப் படத்தினை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி இருக்கிறார். சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.
சமீபத்தில் பார்க்கிங் படத்தின் டிரெய்லர் வெளியானது. அன்றாட வாழ்வியலை தொடர்பு படுத்தி வரக்கூடிய படங்கள் மக்களிடம் எளிதாக சென்றடைந்து விடும். இட நெருக்கடி என்பது எல்லா மக்களும் தினமும் சந்திக்கக்கூடிய பிரச்சனை.
பெரு நகரங்களிலும், இட வசதி இல்லாத குறுகலான இடங்களிலும் வாகனங்கள் நிறுத்த இடமிருக்காது. ஒவ்வொரு வீட்டிலும், கார், பைக் என எந்த வாகனமாக இருந்தாலும், இடநெருக்கடியின் காரணமாக நிறுத்த முடியாமல் இருக்கும்.
ஒருவர் இடத்தில் மற்றவர் காரை நிறுத்துவது, ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு வாகனத்தை பார்க் செய்வது இப்படி ஓரே இடத்தில் வசிக்கும் இருவர் ஓரே பார்க்கிங்காக எப்படி சண்டையிட்டு கொள்கிறார்கள் என்பது தான் பார்க்கிங் படத்தின் கதை.
கார் பார்க்கிங்காக இரு நபர்கள் எந்தளவிற்கு முரட்டு ஆளாக மாறுகிறார்கள் என்பதுதான் மையக்கரு. மலையாளத்தில் 2020ல் வெளியாகி ஹிட்டான ’ஐயப்பனும் கோஷியும்’ போல பார்க்கிங் படமும் இரு நபர்களுக்கு இடையே ஈகோவால் ஏற்படும் மோதல்.
ஹரிஷ் கல்யாணும், எம். எஸ் பாஸ்கரும் மோதிக் கொள்ளும் காட்சிகள் தத்ரூபமாக இருப்பதை டிரெய்லரில் பார்க்கமுடிகிறது. இந்த படத்தின் அறிமுக விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் பேசுகையில், இந்தப்படத்தில் ஹிட் படங்களுக்கான எல்லா அம்சமும் உள்ளது.
படத்தில் பணியாற்றி அனைவரும் அவர்களது பங்கினை சிறப்பாக செய்திருக்கிறார்கள். எம்.எஸ் பாஸ்கருடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென்று விரும்புவதாக கூறினார். இதற்கு அதே மேடையில் பதிலளித்த எம்.எஸ் பாஸ்கர் கமல், விஜய் போன்ற நடிகர்களை இயக்கி பெரும் புகழை பெற்றவர் நீங்கள்.
என்னை விட வயதில் சிறியவராக இருந்தாலும், நீங்கள் கூப்பிடுங்கள் போதும். உடனே நடிக்க வந்துவிடுவேன் என பெருமிதத்துடன் கூறினார். பார்க்கிங் படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. படமும் அதை பூர்த்தி செய்யும் என்று டிரெய்லர் கட் நம்பிக்கை அளிக்கிறது.