இந்திய சினிமாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம்பெரும் பின்னனிப் பாடகி லதா மங்கேஷ்கரே தமிழ்ப் பாடல் ஒன்று பாடுவதற்கு பின் வாங்கியிருக்கிறார். ஆனால் அந்தப் பாடலை எல்.ஆர். ஈஸ்வரி பாடி அசத்தி இன்றளவும் புகழ்பெற்ற பாடலாக இடம்பெறச் செய்திருக்கிறார்.
புதுமை இயக்குநர் என அழைக்கப்படும் இயக்குநர் ஸ்ரீதரின் படைப்பில் 1969-ல் உருவான திரைப்படம் தான் சிவந்தமண். தமிழ் சினிமாவில் முதன் முதலாக வெளிநாடுகளில் ஷுட்டிங் நிகழ்த்தப்பட்ட என்ற பெருமையைப் பெற்ற படம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், காஞ்சனா, நம்பியார், முத்துராமன் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். இப்படம் முதலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை வைத்து அன்று சிந்திய ரத்தம் என்ற பெயரில் படமாக்கினார் இயக்குநர் ஸ்ரீதர். ஆனால் சில காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது.
அதன்பின் ஸ்ரீதர் கதையில் சில மாற்றங்களைச் செய்து சிவாஜிக்காக உருவாக்கினார். இத்திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் எம்.எஸ்-விஸ்வநாதன் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. குறிப்பாக மிக நீண்ட பாடலான ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை கொண்டான்.. பாடல் இன்றும் டிரெண்டிங்கில் இருக்கும் பாடல்.
அதேபோல் துள்ளலிசை என்றாலே இந்தப் பாடல் இடம்பெறாமல் தமிழ் சினிமா கிடையாது என்பது போல் இடம்பெற்ற பாடல்தான் பட்டத்து ராணி பார்க்கும் பார்வை.. வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும் என்ற பாடல். கண்ணதாசன் வரிகளில் உருவான இப்பாடலைப் பாடுவதற்கு பல பாடகர்களை அணுகியிருக்கிறார் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். எனினும் யார் பாடியும் திருப்தி இல்லாமல் இருந்ததால் கடைசியாக எல்.ஆர்.ஈஸ்வரியை அணுகியிருக்கிறார்.
எல்.ஆர்.ஈஸ்வரி குரலில் இந்தப் பாடலைப் பதிவு செய்து கேட்ட பொழுது படத்தின் காட்சிக்கும், எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலும் அப்படியே பொருந்திப் போக பாடல் அற்புதமாக வந்திருக்கிறது. இதன்பின் திரையரங்கில் இந்தப் பாடலை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். கிட்டத்தட்ட லதா மங்கேஷ்கர் முதல் பல பாடகிகள் பாடியும் எம்.எஸ்.வி-க்கு திருப்தி அளிக்காத நிலையில் கடைசியாக எல்.ஆர்.ஈஸ்வரி பாடி அசத்தியிருக்கிறார்.
அதிலும் குறிப்பாக பாடலில் சிவாஜிகணேசன் சாட்டையால் ஒவ்வொரு முறை அடிக்கும் போது எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல் பாடலின் தரத்தையே உயர்த்தும். மேலும் எம்.எஸ்.வி-யின் இசையும் பாடலை வேறொரு தளத்தில் நிறுத்தும். இன்றும் இந்தப் பாடல் போல் மற்றொரு பாடல் வருவது என்பது சாத்தியமே கிடையாது.