எம்.எஸ்.விஸ்வநாதன் கேள்விக்கு பதில் சொன்ன வாலி.. நெகிழ்ந்துபோன மெல்லிசை மன்னர்!

Published:

தமிழ் சினிமாவில் இன்று எத்தனையோ இசையமைப்பாளர்கள் இருக்கலாம். ஆனால் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட அனைவருமே எம்.எஸ்.வி-யின் சாயலைத் தொட்டு வந்தவர்களே. அந்த அளவிற்கு இந்திய மொழிகளில் சுமார் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து மகத்தான சாதனை புரிந்தவர். இசையைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஸ்டைல் உண்டு.

இளையராஜா ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் டியூன் போடுவார். ஏ.ஆர்.ரஹ்மானோ நள்ளிரவில்தான் ரெக்கார்டிங் நடத்துவது வழக்கம். ஆனால் எம்.எஸ்.வி அவர்கள் உட்கார்ந்த இடத்திலேயே காட்சியைக் கேட்டவுடனே இடம், காலம் பார்க்காது மெட்டுப் போடும் வல்லமை படைத்தவர். அதனால் தான் அவரை மெல்லிசை மன்னர் என்கிறோம்.

இசையில் சக்கரவர்த்தியாக விளங்கிய எம்.எஸ்.வி. தனிப்பட்ட முறையில் குழந்தையைப் போன்ற சுபாவம் கொண்டவர். பழகுவதற்கு இனியவர். திறமையாளர்களை மனதாரப் பாராட்டுபவர். இப்படி பல நல்ல குண நலன்களும் கொண்டு விளங்கினார் எம்.எஸ்.வி.

ஒரே வார்த்தை தான் கமல் மற்றும் கிரேஸி மோகனை கிளீன் போல்டு செய்த நாகேஷ்…

ஒருமுறை பணிச்சுமையால் எம்.எஸ்.வி அவர்கள் நள்ளிரவைத் தாண்டி ரெக்கார்டிங் முடிந்திருக்கிறது. அப்போது எம்.எஸ்.வி. லேசாக மது அருந்தியிருக்கிறார். அப்போது இசைக்குழுவில் இருந்தவர்களிடம் நான் இறந்தால் எப்படி அழுவாய் என்று ஒவ்வொருவராகக் கேட்டாராம். அனைவரும் ஒவ்வொரு பாணியில் தங்கள் சோகத்தை வெளிப்படுத்த யார் மேலும் எம்.எஸ்.வி-க்கு திருப்தி இல்லாமல் இருந்திருக்கிறது. அப்போது கவிஞர் வாலியை நோக்கி வந்தார்.

வாலியிடம் நான் செத்தபிறகு எப்படி அழுவாய் என்று கேட்டிருக்கிறார். அப்போது வாலி நான் அழமாட்டேன் என்றவுடன் எம்.எஸ்.வி-க்கு அதிர்ச்சி. ஏன் என்று கேட்க, நீங்கள் இறந்த அடுத்த நிமிடமே என் உயிரும் போய்விடும் என்று பதிலளித்திருக்கிறார். அந்த அளவிற்கு எம்.எஸ்.வி.மேல் அளவற்ற அன்பு கொண்டு விளங்கியிருக்கிறார் கவிஞர் வாலி.

இந்த பதிலைக் கேட்டதும் எம்.எஸ்.விஸ்வநாதான் ஒரு நிமிடம் கலங்கி தன் உதவியாளரை அழைத்து தான் இசையமைக்கும் படங்களில் வேறொரு கவிஞர் எழுத வேண்டிய படம் ஒன்றிற்கு வாலியை முழுவதும் பாட்டெழுத வைத்து தன் அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார் எம்.எஸ்.விஸ்வநாதன். கடைசி வரை தன் குழந்தைத் தனமான செயல்பாடுகளால் அனைவர் மனதிலும் இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி குழந்தை மனிதர் என்ற பெயரையும் பெற்றிருந்தார் எம்.எஸ்.வி.

மேலும் உங்களுக்காக...