தமிழ் சினிமாவின் சிறந்த கதாசிரியராக, எழுத்தாளராக, வசனகார்த்தாவாக, திரைக்கதை அமைப்பாளராக கிட்டதட்ட 500 படங்களுக்கு மேல் எழுதி சினிமா உலகில் பெயர்பெற்றவர்தான் ஆரூர்தாஸ். திருவாரூரில் பிறந்த இவர் தனது இயற்பெயரான யேசுதாஸ் என்பதை சுருக்கி தனது ஊர் பெயரையும் முன்னால் சேர்த்து ஆரூர்தாஸ் என்று அழைக்கப்பட்டார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தவர் ஆரூர்தாஸ். ஏனெனில் சிவாஜியின் பெரும்பாலான ஹிட் படங்கள் ஆரூர்தாஸ் கதை, வசனம் கொண்டதே. படித்தால் மட்டும் போதுமா, பார்த்தால் பசி தீரும், பார் மகளே பார், புதிய பறவை, தெய்வமகன், அன்னை இல்லம் என சிவாஜியுடன் 30-க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்திருக்கிறார்.
மேலும் எம்.ஜி.ஆருக்காகவும் பல படங்களில் தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன், வேட்டைக் காரன், பெற்றால்தான் பிள்ளையா, அன்பே வா உள்ளிட்ட பல படங்களுக்கும் கதை, வசனம் எழுதியுள்ளார். இப்படி தமிழ்சினிமாவின் இருபெரும் ஜாம்பவான்களின் விருப்பத்திற்குரிய கதாசிரியராக விளங்கிய ஆரூர்தாஸ் ஒருமுறை சிவாஜியின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார்.
ஒருமுறை சிவாஜியிடம் ஒரு கதை ஒன்றைச் சொல்லியிருக்கிறார் ஆருர்தாஸ். இந்தக் கதை சிவாஜிக்கு மிகவும் பிடித்துப் போக இதனை தனது சிவாஜி புரடக்ஷன்ஸ் சார்பில் எடுக்கலாம் என ஆரூர் தாஸிடம் கூறியிருக்கிறார். ஆரூர்தாஸூம் சரி என்று ஒப்புக் கொள்ள, பின்னர் சிவாஜி கணேசன் பிற படங்களில் பிஸியானார். ஆனால் ஆரூர் தாஸ் சொன்ன கதையில் அவர் நடிக்க வாய்ப்பு தள்ளிக் கொண்டே சென்றது.
ஆனால் ஆரூர்தாஸ் அதே கதையை எம்.ஜி.ஆரிடம் சொல்ல அவர் உடனே ஒப்புக் கொண்டு நடித்துக் கொடுத்தார். அப்படி உருவான படம் தான் ‘பெற்றால்தான் பிள்ளையா‘. எம்.ஜி.ஆர். தனது வழக்கமான ஸ்டைலில் இருந்து இந்தப் படத்தில் நடிப்பைக் கொட்டியிருப்பார். இதனால் இந்தப் படம் மாபெரும் வெற்றி அடைந்தது.
இந்தப் படத்தினைப் பார்த்த சிவாஜி இது நமக்கு ஆருர்தாஸ் சொன்ன கதை ஆயிற்றே என்று எண்ணி அவரை அழைத்து ஏன் இந்தக் கதையை எம்.ஜி.ஆரிடம் சொன்னீர்கள் என்று கேட்டபோது, ஆரூர் தாஸ் நீங்கள் அடுத்தடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள் உங்களுக்கு அது தொழில். அதேபோல் நானும் எனக்கு பொருளாதாரத் தேவைகள் இருந்த போது அடுத்தடுத்து செல்ல வேண்டியதாயிற்று. இதனால் தான் அந்தக் கதையை எம்.ஜி.ஆரிடம் சொன்னேன் என்று கூற, சிவாஜி கோபமுற்று இனி நாம் எதுவும் பேச வேண்டாம் என்று கூறிருக்கிறார்.
அதன்பின் சிவாஜியும் நடிப்பில் பிஸியானார். இருந்த போதிலும் அவ்வப்போது ஆரூர்தாஸ் கதை, வசனத்தில் உருவான படங்களிலும் நடித்து வந்தார். ஆனால் இருவருமே பேசிக் கொள்ளவில்லை. ஒருமுறை ஷுட்டிங்கில் இருவரும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய சூழல் உருவானது. அப்போது சிவாஜியைக் கடந்து ஆரூர்தாஸ் செல்ல, சிவாஜி அவரை அழைத்து, “ஏண்டா.. ஆரூரா என்கிட்ட பேச மாட்டியா..?“ என்று கேட்டுள்ளார். நீங்கள் தானே பேச வேண்டாம் என்று கூறினீர்கள் என்று ஆரூர்தாஸ் சொல்ல, நான் அண்ணன் டா கோபமாகத்தான் பேசுவேன்.. தம்பி நீ வந்து பேசமாட்டியா என்று அவரை ஆரத் தழுவியிருக்கிறார் சிவாஜி.
சிவாஜியின் இந்த மனநிலையை அறிந்த ஆரூர்தாஸ் நெகிழ்ந்த போய் அவரின் கைகளைப் பற்றி வருத்தம் தெரிவித்திருக்கிறார். இந்தத் தகவலை ஆரூர்தாஸ் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டதாக பத்திரிக்கையாளர் சுரா தெரிவித்துள்ளார்.