தமிழ்த்திரை உலகில் நடிப்பு என்றாலே முதல் இடத்திற்கு நினைவுக்கு வருபவர் செவாலியே சிவாஜி கணேசன் தான். இவர் நடித்த படங்களைப் பார்க்கும் போது நமக்குள் ஒரு சிலிர்ப்பு உண்டாகும். அவர் கர்ஜித்தால் நாமும் தலைநிமிர்ந்து கர்ஜிப்போம். அவர் கம்பீரமாக நடந்தால் படத்தைப் பார்த்து விட்டு வெளியே வரும்போது நாமும் கம்பீரமாக நடப்போம்.
அவருடைய ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு பொருளைத் தருவதாய் இருக்கும். அவர் உடலில் உள்ள அத்தனைப் பாகங்களும் தனித்தனியாகக் கூட நடித்து விடும் திறன் படைத்தது. அப்படி இருக்க அவர் இயல்பாய் நடித்த படங்கள் எது என்று பார்த்தால் எல்லாமே தான் என்று சொல்லலாம்.
பொதுவாக அந்தக் காலத்தில் மானிட்டர்கள் எல்லாம் கிடையாது. ஒரு டேக் எடுத்து விட்டால் அதை இப்போது மானிட்டரில் பார்த்து நல்லா இருக்கா இல்லையா என தெரிந்து கொள்கிறார்கள். டேக் நல்லா வரவில்லை என்றால் மீண்டும் எடுக்கிறார்கள். அந்தக் காலத்தில் இந்த வசதி எல்லாம் இல்லை.
இருந்தாலும் இருக்கின்ற சின்ன சின்ன வசதிகளை மட்டும் வைத்துக் கொண்டு பிரம்மாண்டமான படங்களை எடுத்து இருக்கிறார்கள். உதாரணமாக நாம் பார்க்கலாம் என்றால் வீர பாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், சரஸ்வதி சபதம், திருவிளையாடல் போன்ற படங்களைச் சொல்லலாம். அதே போல மகாகவி பாரதி, திருப்பூர் குமரன், வ.உ.சி., கட்டபொம்மன் இவர்களைத் தத்ரூபமாகக் காட்டியவர் சிவாஜி.
தேவர்மகன், முதல் மரியாதை, படிக்காத மேதை, படையப்பா படங்களில் சிவாஜி நடிப்பில் பட்டை தீட்டப்பட்ட வைரமாய் ஜொலித்திருப்பார்.
அந்தக் காலத்தில் பெரும்பாலானோர் நடிகர்கள் என்றால் நாடக உலகில் இருந்து வந்தவர்களாகத் தான் இருப்பார்கள். திரையுலகில் வெற்றி பெற வேண்டும் என்றால் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பாடவும், ஆடவும், திறமையாக சண்டை போடவும் தெரிந்து இருக்க வேண்டும். அப்படி நாடக உலகில் இருந்து வந்து வெற்றி பெற்ற நடிகர்களில் முதன்மையானவர் யார் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி தான்.
இவர் திரையுலகில் பணக்காரன், ஏழை, காவல் அதிகாரி, திருடன், வக்கீல், நீதிபதி, ராணுவ வீரன், மருத்துவர், நோயாளி, மாற்றுத்திறனாளி, அப்பா, அண்ணன், தம்பி, நண்பன், அன்பான கணவன், ஆருயிர் காதலன் என்று இவர் நடிக்காத பாத்திரங்களே இல்லை எனலாம்.
கிருபானந்த வாரியாரே சிவாஜியைப் பாராட்டியுள்ளார். என் அப்பன் சிவன் எப்படி இருப்பார் என்று உங்கள் ரூபத்தில் தான் நான் அறிந்து கொண்டேன் என்று சிவாஜியிடம் சொல்லி இருக்கிறார்.