ஜெயலலிதாவை பார்த்ததும் வாலி எழுதிய பாடல்.. ஊர் முழுக்க பாட்டு ஹிட்டாக காரணம் அந்த ஒரு லைன் தான்..

By Ajith V

Published:

தமிழ் சினிமாவின் சிறந்த பாடலாசிரியர்களை பெயரை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஏற்ப வரிசைப்படுத்தி கொண்டே போகலாம். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த சமயத்தில் கவிஞர் கண்ணதாசனும் தனது பாடல் வரிகளுக்காக ஒரு ரவுண்டு வந்தார். தனது வரிகளில் உள்ள நேர்த்தியினால் பலரையும் தன் பக்கம் உற்று பார்க்க வைத்த கண்ணதாசன், தன்னை சுற்றி நடந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப பாடல் வரிகளை தயார் செய்வதிலும் கில்லாடி.

கண்ணதாசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் முக்கியமான பாடலாசிரியர் என்றால் நிச்சயம் கவிஞர் வாலியை சொல்லலாம். சுமார் 60 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பாடல்களை எழுதி வந்த கவிஞர் வாலி, எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், கீரவாணி, ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, தமன், அனிருத் என இந்த காலத்து தலைமுறை இசையமைப்பாளர்கள் வரை இணைந்து பணிபுரிந்துள்ளார்.

மேலும் ஒவ்வொரு காலத்திற்கேற்ப தனது வரிகளில் புதுமையை காண்பிக்கும் திறமையும் வாலிக்கு உண்டு. இந்த காலத்து இளைஞர்களை கவரும் வகையில் பல சிறந்த பாடல்களை வாலி எழுதி உள்ளார். தமிழ் சினிமாவில் தனது வரிகளால் ஒரு ஆட்சியை புரிந்த கவிஞர் வாலி, கடந்த 2013 ஆம் ஆண்டு தனது 81 ஆவது வயதில் காலமானார். காலத்தால் அவர் மறைந்தாலும் அவரது வரிகள் இன்னும் பலருக்கு புத்துணர்ச்சியை கொடுத்து கொண்டு தான் இருக்கிறது.

இந்த நிலையில், ஜெயலலிதாவை கண்டதும் வாலி எழுதிய பாடல் குறித்து சுவாரஸ்ய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. கே. பாலச்சந்தர் இயக்கத்தில் கடந்த 1966 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் மேஜர் சந்திரகாந்த். இந்த திரைப்படத்தில் மேஜர் சுந்தர்ராஜன், முத்துராமன், நாகேஷ், ஜெயலலிதா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். வி. குமார் இசையமைத்த இந்த படத்திற்கு வாலி மற்றும் சுரதா ஆகியோர் பாடல்களை எழுதி இருந்தனர்.
Jayalalithaa

அப்போது ஒரு பாடலின் படப்பிடிப்பில் பாலச்சந்தர் பிசியாக இருக்க, பாடல் வரிகளை கவனிக்குமாறு வாலி மற்றும் வி. குமார் ஆகியோரிடம் கூறி உள்ளார். அப்போது ஸ்டூடியோவில் இருந்த வாலி, அருகே படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு சென்றுள்ளார். அங்கே போனதும் பாடலில் ஆடிக் கொண்டிருந்த ஜெயலலிதாவை பார்த்த வாலிக்கு பாடல் வரிகள் கிடைத்துள்ளது. இதனால் மீண்டும் ஸ்டூடியோவிற்கு வாலி வந்துள்ளார்.

அப்போது, “நேற்று நீ சின்ன பாப்பா, இன்று நீ அப்பப்பா” என்ற ஆரம்ப வரிகளை ஜெயலலிதாவை குறிப்பிட்டு வாலி சொன்னதும் அனைவருமே அதிர்ந்து போனார்கள். இதற்கு விளக்கம் கொடுத்த வாலி, ஜெயலலிதாவை நான் நேற்று வரை அதிகம் கல்லூரி யூனிஃபார்மில் தான் பார்த்துள்ளேன் என்றும் இன்று அவரை பார்த்த போது நடிகையாக மாறி விட்டதால் அதனை குறிப்பிட்டு தான் பாடல் எழுதினேன் என்றும் கூறி அனைவரையும் அசரடித்து விட்டார்.