நடனத்தில் அசத்தியவர்.. நடிப்பிலும் ஒரு ரவுண்டு வந்து பெயர் எடுத்த ராம்ஜி.. ஆனாலும் கைகூடாத விஷயம்!

By Bala Siva

Published:

அகத்தியன் இயக்கத்தில் உருவான ’காதல் கோட்டை’ என்ற திரைப்படம் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை அவருக்கு பெற்றுக் கொடுத்தது. அஜித் மற்றும் தேவயானி நடித்த இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. அதே போல, இந்த படத்தில் வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடியவரை ரசிகர்கள் மறக்கவே முடியாது. அந்த பாடலுக்கு டான்ஸ் ஆடியவர் தான் நடன இயக்குனர் ராம்ஜி.

இவர் நடன இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் ஏராளமான படங்களில் தோன்றி உள்ளார். ‘கிழக்கு கரை’ என்ற திரைப்படத்தில் ’சந்நிதி வாசலில்’ என்ற பாடல் மூலம் டான்ஸராக அறிமுகமானார். அதன் பிறகு பல திரைப்படங்களில் இவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். கமல்ஹாசன் நடித்த சிங்காரவேலன் என்ற படத்தில் ’போட்டு வைத்த’ பாடலுக்கும், நம்மவர் படத்தில் ஒரு கேரக்டரிலும் நடித்துள்ளார்.

இருந்தாலும் அவருக்கு மிகப்பெரிய புகழை பெற்றுக் கொடுத்தது ’காதல் கோட்டை’ படத்தில் இடம்பெற்ற ’வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’ பாடல் தான். அதன் பின்னர் இவர் காலமெல்லாம் காதல் வாழ்க, லவ் டுடே போன்ற படங்களில் பாடலுக்கு நடனமாடிய நிலையில் அதன் பிறகு சில படங்களில் காமெடி, குணச்சித்திர கேரக்டர்களில் நடித்தார். குறிப்பாக வாசுகி, விடுகதை, காதலே நிம்மதி, துள்ளித் திரிந்த மனம் போன்ற படங்களில் நடித்தார்.

ramji1

அஜீத் நடித்த ’காதல் மன்னன்’ என்ற திரைப்படத்தில் இவர் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார். கடந்த 90கள் மற்றும் 2000 ஆண்டுகளில் இவர் ஏராளமான படங்களில் நடனமும் சில படங்களில் நடித்தும் உள்ளார். கடந்த 2019 ஆம் விஜய் சேதுபதி நடித்த ’சங்கத்தமிழன்’ என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து அசத்தியிருப்பார் ராம்ஜி.

இந்த நிலையில் சில தொலைக்காட்சி தொடர்களிலும் ராம்ஜி நடித்துள்ளார். குறிப்பாக கவிதாலயா நிறுவனம் தயாரித்த ரமணி வெர்சஸ் ரமணி என்ற தொடரில் இவர் சூப்பராக நடித்திருப்பார். அவர் தேவதர்ஷினியுடன் சேர்ந்து நடித்த காட்சிகள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ரமணி vs ரமணி மூன்றாம் பாகத்திலும் இவர் நடித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் காசளவு நேசம், மர்ம தேசம், வள்ளி, பிள்ளை நிலா, மடிப்பாக்கம் மாதவன், டார்லிங் டார்லிங், மகராசி, பூவா தலையா போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். தமிழ் திரை உலகில் மிகச்சிறந்த நடனகலையை கற்ற இவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதும் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் தான் பல படங்களில் இவர் நடனமாடி உள்ளார்.

ரமணி vs ரமணி தொடருக்கு பிறகு தான் இவருக்கு ஒரு சில சீரியல்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தான் இவர் தொலைக்காட்சி சீரியல்களில் பிசியானார். ஆனாலும் தமிழ் திரை உலகம் இவரது திறமையை முழு அளவில் பயன்படுத்தவில்லை என்று தான் கூறப்படுகிறது.