ராஜுமுருகனின் ’ஜப்பான்’ ஜெயித்ததா? கார்த்தியை கவிழ்த்ததா?.. விமர்சனம் இதோ!

By Sarath

Published:

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக ராஜுமுருகன் மாறுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தொடர்ந்து அவரது படங்கள் சரிவை சந்தித்து வருகின்றன.

குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸியை தொடர்ந்து மீண்டும் J எழுத்தில் ஜப்பான் என நியூமராலஜி பார்த்து டைட்டில் வைத்தாரா என்னவோ தெரியவில்லை. இந்த படமும் சரியாக அமையவில்லை.

ஜப்பான் விமர்சனம்

நடிகர் கார்த்தி ஒரு இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்தால் எச். வினோத் போலவும், லோகேஷ் கனகராஜ் போலவும் அந்த இயக்குனர்கள் அடுத்தடுத்து பெரிய நடிகர்களை வைத்து படம் எடுத்து பெரிய  இயக்குனர்கள் ஆகிவிடுவார்கள். அதே போன்ற ஒரு வாய்ப்பு ராஜுமுருகனுக்கு கிடைத்தும் அதை அவர் கோட்டை விட்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

தனது அழுத்தமான அரசியல் களத்தையும் தொட முடியாமல் கார்த்திக்காக அதில் கமர்ஷியலை கலக்க முயன்று அதையும் சரிவர செய்ய முடியாமல் தடுமாறியிருப்பது திரைக்கதையின் போக்கு பல இடங்களுக்கு பாதை மாறி செல்லும் போதே தெளிவாக தெரிந்து விடுகிறது.

லக்கி ஸ்டார் சுனில் இந்த ஆண்டு தமிழில் நடித்த மாவீரன், ஜெயிலர், மார்க் ஆண்டனி என வரிசையாக மூன்று படங்கள் ஹிட் அடித்த நிலையில், அந்த வரிசையில் ஜப்பான் இடம்பெறும் என எதிர்பார்த்த படக்குழுவினருக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

200 சவரன் நகையை நகைக்கடையில் ஓட்டை போட்டுக் கொள்ளையடிக்கும் ஜப்பானை போலீஸார் தேடுகின்றனர். அரசியல்வாதியின் நகைக்கடை என்பதால் பிரஷர் அதிகம் இருக்கிறது. ஜப்பான் சிக்கினாரா? கதை என்ன ஆனது? என்பது தான் ஜப்பான் படத்தின் கதை.

ஹீரோயினாக அனு இம்மானுவேல் வருவதும் படத்தில் அவருக்கு ஒட்டிக்கோ கட்டிக்கோ கதாபாத்திரமே கிடைத்திருக்கிறது. நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் இருந்த அளவுக்கு டச்சிங் டச்சிங் சீன்ஸ் இல்லை, பாடலை தவிர.. சுனில், ஜித்தன் ரமேஷ், கே.எஸ். ரவிகுமார் உள்ளிட்ட நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை புரிந்துக் கொண்டு சரியாக நடித்துள்ளனர்.

கார்த்தி இதுவரை பார்க்காத அளவுக்கு வித்தியாசமான தோற்றத்தில் நடை, உடை பாவனையில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறி வந்தாலும், திரைக்கதை வலுவாக இல்லாதது தான் ஜப்பான் படத்திற்கு பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது.

ஜப்பான் – ஜருகண்டி!

ரேட்டிங் – 2/5.