ஒரு நாள் ஷூட்டிங்குடன் நின்ற படம்.. பணமே இல்லாமல் தயாராகியும் வெளியாகி வென்றது எப்படி?

Published:

ஒரு திரைப்படத்தை தயாரிப்பது என்பது விளையாட்டான காரியம் இல்லை. திடீரென பண சிக்கல் உருவாகி அதன் காரணமாக படப்பிடிப்பை நிறுத்திய சம்பவங்கள் தமிழ் சினிமாவில் நிறைய நடந்துள்ளது. இதே போல, படம் முழுவதும் தயாரான பிறகும் கூட பண சிக்கல்கள் உருவாகி பெட்டிக்குள் அடங்கிக் கிடக்கும் படங்களும் ஏராளம்.

அப்படி பிரபல எழுத்தாளர் ஒருவர் தயாரிப்பாளராக மாறி, படத்தை ஆரம்பித்து பின் பட்ட கஷ்டங்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம். சில படங்களுக்கு வசனம் எழுதி அதன் மூலம் பெயர் எடுத்தவர் காரைக்குடி நாராயணன். இவரை தயாரிப்பாளர் ஒருவர் அணுகி அச்சாணி என்ற படத்தை நாம் இருவரும் சேர்ந்து தயாரிக்கலாம், நான் பண முதலீடு செய்கிறேன், நீங்கள் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குங்கள், வருகிற லாபத்தை இருவரும் சேர்ந்து எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து காரைக்குடி நாராயணன் இதற்கு ஒப்புக்கொண்டு அச்சாணி என்ற திரைப்படத்தை 1978 ஆம் ஆண்டு இயக்க முன்வந்தார். இந்த படத்தில் நாயகனாக ஜெய்சங்கர் நடிக்க இருந்த நிலையில் தயாரிப்பாளரின் அழுத்தம் காரணமாக முத்துராமன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். நாயகியாக லட்சுமி நடித்தார். லட்சுமியின் தங்கையாக படாபட் ஜெயலட்சுமி நடித்தார். ஏற்கனவே படாபட் ஜெயலட்சுமி கே பாலச்சந்தர் இயக்கிய ’நிழல் நிஜமாகிறது’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தாலும் அச்சாணி படம் தான் முதலில் வெளியானது என்பதால் தமிழில் படாபட் ஜெயலட்சுமி நடித்த முதல் படம் அச்சாணி என்ற பெருமையை பெற்றது.

karaikudi narayanan1

‘அச்சாணி’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கிய நிலையில் முதல் நாளே பணம் இல்லாமல் நின்று விட்டதை பார்த்து காரைக்குடி நாராயணன் அதிர்ச்சி அடைந்தார். இவரால் படத்தை தயாரிக்க முடியுமா? இவரிடம் உண்மையிலேயே பணம் இருக்கிறதா? என்ற சந்தேகம் இருந்தது. இருந்தாலும் களத்தில் இறங்கிவிட்டோம் பின்வாங்க கூடாது என்று தன்னுடைய சேமிப்பு மற்றும் தனது நண்பர்களிடம் இருந்த பணம் ஆகியவற்றை போட்டு படத்தை எடுத்தார்.

இந்த படத்தின் முதல் பாடல் பதிவு செய்ய இளையராஜா வந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. முதல் நாள் படப்பிடிப்பு ரத்து, முதல் பாடல் ஒலிப்பதிவிலும் சிக்கல் என்பது அபசகுணமாக தெரிந்தது. இருப்பினும் இளையராஜா காரைக்குடி நாராயணனை அழைத்து நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம், பிரசாத் ஸ்டுடியோவுக்கு இன்று மாலை சென்று நான் சொன்னபடி இரண்டு பாடல்களையும் பதிவு செய்து தருகிறேன் என்று கூறினார். அவற்றில் ஒரு பாடல் தான் ’மாதா உன் கோவிலில்’ என்ற பாடல். இந்த பாடல் இன்று வரை பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வழியாக ‘அச்சாணி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து 1978 ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி வெளியானது. இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் விளம்பரம் இல்லை என்றாலும் படத்தை பார்த்த ரசிகர்களே இந்த படத்தை விளம்பரப்படுத்தியதால் மிகப்பெரிய வெற்றி தேடி வந்தது. இந்த படத்தின் முதலீட்டை விட அதிகமாக லாபம் வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் கிடைத்த லாபம் காரணமாக தான் காரைக்குடி நாராயணன் அதன் பிறகு மேலும் சில படங்களை துணிந்து தயாரிக்க ஆரம்பித்தார். இன்னொரு பக்கம் சில படங்களை இயக்கவும் செய்திருந்தார்.

மேலும் உங்களுக்காக...