இன்று வரும் திரைஇசை பாடல்கள் ஆங்கில மொழி கலப்பும், அதிர வைக்கும் இசையும், கதை பிளக்கும் சத்தமும் கொண்டு வந்த ஒரே மாதத்தில் காணாமல் போய் விடுகின்றன. ஆனால் பழைய காலத்து திரைப்படங்கள் எல்லாம் இன்றும் நினைவில் இருக்கக் காரணம் அதில் இடம்பெற்றிருக்கும் பாடல்களின் இனிமை தான். செவிகளுக்கு விருந்தளிக்கும் தரமான சங்கீதமும், அதற்கு கவிஞர்களின் அற்புதமான வரிகளும் ஒரு சேர ரசிகனை மகிழ்வித்தது. இப்படி இசை ரசிகர்களை மகிழ்வித்த ஒரு பாடல்தான் வானம்பாடி திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக…’ என்ற பாடல்.
கவிஞர் கண்ணதாசனின் சொந்த படமான ‘வானம்பாடி’ 1963ல் வெளிவந்தது. எஸ்.எஸ்.ஆர்., தேவிகா, முத்துராமன், குழந்தை நட்சத்திரமாக கமல் ஆகியோர் நடித்த இப்படம் கண்ணதாசன் வரிகளில், எம்.எஸ்.வி இசையில் செவிகளுக்கு விருந்தளிக்கும் பாடல்களைக் கொண்டிருந்தது.
குறிப்பாக ‘கங்கைக்கரை தோட்டம்’, ‘தூக்கணாங் குருவிக்கூடு..’ போன்ற சூப்பர்ஹிட் பாடல்கள் இன்றும் காலங்கடந்தும் காதுகளுக்கு விருந்தளிக்கும் கிளாசிக் பாடல்கள். இந்தப் படத்தில் இடம்பெற்ற மற்றொரு பாடலான ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே பாடல்..’ பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது. நாயகனுக்கும், நாயகிக்கும் வரும் போட்டி பாடலான இதில் கதாநாயகி தேவிகா ஒருசெய்யுளைப் பாடுவார்.
தாதி தூது தீது தத்தும் தத்தை சொல்லாது..
தூதி துது ஒத்தித்தது தூது செல்லாது..
தேது தித்தித் தொத்து தீது தெய்வம் வராது – இங்கு
துத்தி தத்தும் தத்தை வாழ தித்தித்ததோது..
என்று ‘த’ கர வரிசையில் அமைந்த இந்த செய்யுள் காளமேகப் புலவர் இயற்றியதாகும். இயல்பாக கவிஞர்கள் பாடலின் சுவை கூட்ட வேறொரு செய்யுளை இணைப்பது வழக்கம். இந்தப் பாடலின் வரிகளை நுட்பமாக ஆழ்ந்து உணர்தல் வேண்டும். இவ்வாறு கண்ணதாசன் தான் எப்போதோ படித்த செய்யுளை இணைத்து அதில் கூடுதலாக சில வார்த்தைகளை சேர்த்து பாடலை சுவாரஸ்யமாக இயற்றியிருப்பார். பாடல்களுக்காகவே இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.