தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் திலகம் சிவாஜியை வைத்து இயக்குனர் பீம்சிங் பாகப்பிரிவினை எனும் படத்தை இயக்குவதாக இருந்தார். தயாரிப்பாளர் வேலுமணியும், இயக்குனர் பீம்சிங்கும் இணைந்து பாகப்பிரிவினை படத்திற்கான துவக்க வேலைகளை ஆரம்பித்த நேரத்தில் நடிகர் சிவாஜிக்கும் கவிஞர் கண்ணதாசனுக்கும் இடையே சில முரண்பாடுகள் இருந்தது. இதன் காரணமாக இருவருக்கிடையே எந்த பேச்சு வார்த்தையும் இல்லாமல் சில நாட்கள் விலகி இருந்தனர். அந்த நேரத்தில் தயாரிப்பாளர் வேலுமணி கவிஞர் கண்ணதாசனை நேரில் சந்தித்து நீங்கள் என் படத்திற்கு ஓர் பாடல் எழுத வேண்டும் என தயக்கத்துடன் கூறினார். அப்பொழுது கண்ணதாசன் என்னப்பா சிவாஜி படத்திற்கு என்னை அழைக்கிறாய். வழக்கமாக அவரது படத்திற்கு பட்டுக்கோட்டை தன பாடல்கள் எழுதுவார் என ஆச்சிரியத்துடன் கேட்டுள்ளார்.
அந்தப் படத்தில் பிள்ளையார் கோவிலுக்கு குடியிருக்க வந்திருக்கும் எனும் பாடலை பட்டுக்கோட்டையார் எழுதியிருந்தார். ஆனால் இந்த படத்தில் அமையும் மற்றொரு பாடலான தாலாட்டு பாட்டு அவரால் உடனடியாக எழுதிக் கொடுக்க முடியவில்லை. பொதுவாக பட்டுக்கோட்டையாருக்கு வார்த்தைகள் நெத்தியடியாக அமைய வேண்டும், இல்லை என்றால் சில காலம் எடுத்துக் கொள்வது வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் தயாரிப்பாளர் வேலு மணிக்கு எல்லா வேலைகளும் மிகச் சீக்கிரமாக நடக்க வேண்டும். உடனே பட்டுக்கோட்டை அவர்கள் இவ்வளவு அவசரப்பட்டீர்கள் என்றால் என்னால் பாடல்கள் எழுத முடியாது என்று கூறியுள்ளார். மேலும் தாலாட்டு பாடல் எழுதுவதில் கவிஞர் கண்ணதாசன் மிகச்சிறப்பான மனிதர் என கூறி அவரை வைத்து எழுதிக் கொள்ளுமாறும் விலகியுள்ளார்.
இந்த சூழ்நிலையை வேலுமணி எவ்வளவு எடுத்துக் கூறியும் கவிஞருக்கு சிவாஜி படத்தில் பாடல் எழுத விருப்பமில்லை. கவிஞரை எப்படியாவது இந்த படத்தில் பாடல் எழுத வைக்க வேண்டும் என நினைத்த வேலுமணி கவிஞரின் உதவியாளரிடம் கண்ணதாசன் அவர்களை பாடல் எழுத வைக்க வேண்டியது உன் பொறுப்பு என பொறுப்பை ஒப்படைத்து சென்று விட்டார். கண்ணதாசன் அவர்களின் முடிவில் நாம் எப்படி தலையிடுவது என உதவியாளருக்கு தயக்கம் இருந்தாலும் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பும் நேரத்தில் இருக்கும் இடைவெளியில் கவிஞர் கண்ணதாசனிடம் மெதுவாக பேச்சை கொடுத்தார் உதவியாளர். அப்போது நடிகர் திலகம் சிவாஜிக்கும் உங்களுக்கும் நடந்த பிரச்சனை எப்பவோ நடந்தது, இப்பொழுது அவர்கள் பாட்டு வேண்டும் என வந்திருக்கிறார்கள் நாமாக செல்லவில்லை அவர்களாக தான் வந்துள்ளார்கள் என விளக்கினார்.
அதற்கு கண்ணதாசன் எழுத எனக்கு விருப்பம் தான் ஆனால் என்னை கேட்காமல் ஏன் கண்ணதாசனிடம் பாடல் வரிகள் பெற்றீர்கள் என சிவாஜி கோபப்பட்டு அந்த படத்தில் அந்த பாடல் இடம்பெறாமல் சென்று விட்டால் அது நமக்கு மிகப்பெரிய அவமானம் என விளக்கினார். அப்படி சிவாஜி வேண்டாம் என மறுத்தால் அது நமக்கு மட்டுமா அசிங்கம் பாட்டு எழுதி வாங்கிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கும் அசிங்கம் தான். அது மட்டுமில்லாமல் சிவாஜியின் அனுமதி இன்றியா இவர்கள் வந்திருப்பார்கள் என கூறினார். உதவியாளரின் வற்புறுத்தலை புரிந்து கொண்டு யோசித்தார் கவிஞர் கண்ணதாசன். சிவாஜியின் அனுமதியுடன் தான் தயாரிப்பாளர் வந்துள்ளார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு பாகப்பிரிவினை படத்திற்கு பாடல்கள் எழுதினார் கவிஞர் கண்ணதாசன்.
அந்த படத்தில் நடிகர் சிவாஜிக்கு ஒரு கை சற்று ஊனமாக இருக்கும் தன் குழந்தைக்கு தாலாட்டு பாடுவது போன்ற பாட்டு. அந்த பாடல் தான் ஏன் பிறந்தாயோ மகனே ஏன் பிறந்தாய். அடுத்ததாக சிவாஜியின் தாழ்வு மனப்பான்மையை போக்கும் விதத்தில் கதாநாயகி பாடுவது போன்று ஒரு பாடல். அதில் தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தில் குறை உண்டோ, அடுத்து தலையாம் பூ முடித்து என மூன்று பாடல்களை கவிஞர் எழுதி இருப்பார். இந்த மூன்று பாடல்களும் சிறப்பாக இசையமைக்க பட்டிருந்தது. பாகப்பிரிவினை படத்திற்காக கண்ணதாசன் எழுதிய பாடல்கள் அனைத்தும் நடிகர் சிவாஜிக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன் காரணமாக இனி சிவாஜி நடிக்கும் அனைத்து படத்திற்கும் கண்ணதாசனே பாடல் எழுதும்படி கூறியிருந்தார்.
அப்படித்தான் பாசமலர் படத்திற்கும் கவிஞர் கண்ணதாசன் பாடல்கள் எழுதினார். பாடல் வரிகளை கவிஞர் சொல்ல சொல்ல அவர் உதவியாளர் எழுதும் பொழுதே இந்த பாடல் மிகப்பெரிய வெற்றியடையும் என பலரும் வியந்து பாராட்டினர். இந்த படத்திற்குப் பிறகு கவிஞர் கண்ணதாசனும் சிவாஜியும் இணைந்ததாக கூறப்படுகிறது.