காஞ்சிப் பெரியவரும், எம்ஜிஆரும் சந்தித்துக் கொண்ட காட்சி உணர்வுப்பூர்வமானது. எப்படி என்று பார்ப்போமா…
காஞ்சி சங்கர மடத்தின் முன் அந்தக் கார் வந்து நிற்கிறது. அதிலிருந்து மக்கள் திலகம் எம்ஜிஆர் இறங்கி வருகிறார். அப்போது அவர் முதல்வராக இருந்த சமயம்.
எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென்று வந்ததால் என்ன செய்வது என்றே மடத்தில் உள்ளவர்களுக்கு தெரியவில்லை. அவர்களுக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. அங்கும் இங்குமாக அலைபாய்ந்தார்கள். எம்ஜிஆர் அவர்களைப் பார்த்ததும் ஏன் இந்த பரபரப்பு? என்று கேட்டார்.
அதற்கு மடத்தில் உள்ளவர்கள் அன்றைய மடாதிபதியான காஞ்சி மகா பெரியவர் மடத்தில் இல்லை என்றும் இங்கு இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குடிலில் தியானம் செய்து கொண்டு இருக்கிறார் என்றும் கூறினர். முறைப்படி முதல்வர் வந்தால் மடத்தில் உள்ளவர்கள் அவரைப் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்க வேண்டும். ஆனால் அப்படி செய்ய முடியவில்லையே என்பது தான் அவர்களின் பரபரப்புக்குக் காரணம்.
அவர்கள் இப்படிச் சொன்னதும், அதனால் என்ன அங்கு போய் அவரைப் பார்த்து விடுகிறேன் என்றார் எம்ஜிஆர்.
கார் குடிலின் அருகே சென்றது. அங்கு சிறிது தூரம் சந்தில் நடந்து சென்றார். அங்கு போனதும், காஞ்சி பெரியவர் சொல்கிறார். உன்னை இங்கு உட்கார வைக்கக்கூட இருக்கை இல்லையே என்கிறார். காஞ்சி பெரியவரைப் பொருத்தவரை அவருக்குப் பிடித்தமானவர்களை மட்டுமே ஒருமையில் அழைப்பாராம்.

அதற்கு எம்ஜிஆர் சொன்ன பதில் இது தான். இந்த மடத்தில் நீங்கள் தான் முதல்வர். நான் இங்கேயே இருந்து கொள்கிறேன் என மண் தரையில் உட்கார்ந்து கொண்டார் எம்ஜிஆர். அப்போது அந்த மகாபெரியவர், எம்ஜிஆரிடம் இங்கு முருகரை வழிபட அவரது அறுபடை வீடுகளான பழனி, திருப்பரங்குன்றம், திருத்தனி என வெவ்வேறு இடங்களுக்கு நேரில் சென்று வழிபட வேண்டியுள்ளது. அதனால் அவர்களுக்கு பயணச்செலவு மற்றும் நேர விரயம் தான் ஆகிறது. இதனால் பக்தர்கள் அனைவரும் வழிபடும் வகையில் இங்கேயே அந்த அறுபடை வீடுகளையும் தரிசிக்குமாறு உன் ராஜ்ஜியத்தில் ஒரு கோவிலைக் கட்டிக் கொடு என்று கேட்டாராம்.
இதற்குத் தானா என்னை நீங்கள் நேரில் வரச் சொன்னீர்கள்? போன் செய்தால் கூட போதுமே. செய்து கொடுத்திருப்பேனே என்றார் எம்ஜிஆர். அப்போது அப்படி செய்தால் நான் உன்னை எப்படி பார்க்க முடியும். உன்னைக் காண பெரிய கூட்டமே வெளியில் நிற்கிறது. பாதுகாப்பாகச் செல் என்று அவரை வழி அனுப்பி வைத்தாராம் அந்த மகாபெரியவர்.
அவர் சொன்னது போல் உருவானது தான் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அறுபடை வீடு முருகன் கோவில். எம்ஜிஆர் உடல் நலம் குன்றி அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற போதும் அவர் நலமாக வேண்டி காஞ்சி பெரியவர் பிரத்யேக பூஜை செய்தாராம். அதற்கு முன்பு வரை யாருக்கும் அவர் தனியாக இப்படி பூஜை செய்ததே இல்லையாம்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


