காஞ்சனா 3 ராகவா லாரன்ஸ் நடித்து அவரே இயக்கிய படமாகும், எப்போதும் போல் பேய் பயம், காதல், கவர்ச்சியான டான்ஸ், நகைச்சுவை, சென்டிமென்ட் என பக்கா லாரன்ஸ் படமாக இது இருந்தது.
ஓவியா, வேதிகா, நிக்கி தம்போலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். காஞ்சனா படத்தின் மூன்றாவது பாகமாக வெளியானது. கதைத் தொடர்ச்சி என்று பெரிதாக இல்லாவிடினும், இதுவும் காஞ்சனா1, காஞ்சனா 2 போன்ற கதையினையே கொண்டுள்ளது.
மேலும் நகைச்சுவைக்கு வலு சேர்க்க சூரி, ஸ்ரீமன், கோவை சரளா, தேவ தர்ஷினி என நகைச்சுவைக் கலைஞர்கள் பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
வழக்கம்போல் பேய்க்கு பயப்படும் பிள்ளை, மூன்று முறைப் பெண்களுடன் லூட்டி, கோவை சரளா இடுப்பில் உட்கார்ந்து சேட்டை பண்ணும் லாரன்ஸ், கோவை சரளா- தேவ தர்ஷினி காம்போ என அனைத்தும் வேற லெவல்.
வழக்கம்போல் ஒரு ஃப்ளாஸ்பேக், அதில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக கஷ்டப்படும் லாரன்ஸின் தாயார், தாய் இறப்பிற்குப் பின் ஆசிரமத்தை எடுத்து நடத்தும் லாரன்ஸ்.
தாதாக்களால் ஆசிரமத்திற்கு ஏற்படும் பிரச்சினை, அதனால் இறந்துபோன லாரன்ஸ் பேயாகி வில்லன்களைக் கொல்லுதல் இதுவே கதையாக இருந்தாலும், வழக்கம்போல் நகைச்சுவையால் ஸ்கோர் பண்ணி, ரூ.40 கோடி பட்ஜெட்டில் எடுத்த படத்தினை ரூ.130.2 கோடி வரை வசூல் பார்த்திருப்பார்.