தேவர் மகன் படத்துல கமல் தவிர முதலில் இருந்தது இவங்கதான்.. உலக நாயகன் செஞ்ச மாற்றத்தால் மாபெரும் வெற்றி கண்ட வரலாறு

By John A

Published:

இன்றும் தமிழ் சினிமாவின் பிளாக் பஸ்டர் படங்களில் ஒன்றாகவும், உலக நாயகன் கமல்ஹாசன் திரை வரலாற்றில் தவிர்க்க முடியா மைல் கல் படமாகவும் விளங்குவது தேவர் மகன். கடந்த 1992-ல் தீபாவளி தினத்தில் வெளியான தேவர் மகன் திரைப்படம் கிராமத்து பாணியில் சாதிக் கலவரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தின் கதை, திரைக்கதை பணிகளை கமல்ஹாசன் வெறும் ஏழே நாட்களில் எழுதி முடித்தார்.

பரதன் இப்படத்தினை இயக்க, இளையாராஜா இசையமைத்திருந்தார். பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு கிராமத்து மண்வாசனையை கண்முன் நிறுத்தியது. 5 தேசிய விருதுகளைப் பெற்றதுடன், ஆஸ்கருக்கும் இந்தப் படம் பரிந்துரைக்கப்பட்டது. இப்படத்தில் முதலில் பெரிய தேவர் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது விஜயகுமார் மற்றும் எஸ்.எஸ் ராஜேந்திரனைத்தான் முடிவு செய்திருந்தது படக்குழு. ஆனால் கமலுக்கு அதில் திருப்தியே இல்லையாம். அவரே சிவாஜியிடம் கதை சொல்லி கால்ஷூட் கேட்டாராம். ஆனால் அந்த சமயத்தில் சிவாஜி உடல்நிலை மோசமாக சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு செல்ல, சரியாகி வரும் வரை காத்திருந்து படத்தினை உருவாக்கினார்களாம்.

மேலும் ரேவதி வேடத்தில் முதலில் நடிக்க தேர்வானவர் நடிகை மீனா. அவரை வைத்து சில நாட்கள் படப்பிடிப்பும் முடிந்ததாம். ஆனால் அவர் கமலுக்கு ரொம்ப வயது குறைவாகத் தெரியவே அவருக்கு பதில் ரேவதி மாற்றப்பட்டாராம். அதன் பின்னரே முழு படம் உருவாகி வசூலில் சக்கைப் போடு போட்டது.

நட்புக்காக கவுண்டமணி செஞ்ச காரியம் இதான் : உயிருக்கும் மேல அப்படி என்ன செஞ்சார் தெரியுமா?

இதில் சக்திவேலாக கமல் கெத்துக் காட்ட, பெரிய தேவராக சிவாஜி மிரட்டியிருப்பார். மாயாண்டித் தேவராக நாசர் வில்லத்தனம் காட்ட அடக்க ஒடுக்கமாய் பஞ்சவர்ணமாக ரேவதி நடித்திருப்பார். இன்றும் இந்தப் படத்தின் சாயல் இல்லாமல் ஒரு கிராமத்து பண்ணையார் படம், சாதி ரீதியிலான படம் உருவானதாக வரலாறு இல்லை. இசக்கியாக வடிவேலு நம்மை அழவைத்து இருப்பார்.

இயக்குநர் மாரிசெல்வராஜ் தனது மாமன்னன் படத்தில் வடிவேலுவைத் தேர்ந்தெடுக்கக் காரணம் தேவர் மகன் இசக்கி கதாபாத்திரம் தான் என பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தில் ஸ்ருதிஹாசன் மழலைக் குரலில் நடிகர் திலகத்துடன் இணைந்து போற்றிப் பாடடி பொண்ணே பாடலைப் பாடியிருப்பது தனிச்சிறப்பு. இப்படத்திற்குப் போட்டியாகவே ரஜினிக்கு பின்னர் எஜமான் படம் வந்தது குறிப்பிடத்தக்கது.