அள்ளி அள்ளி கொடுப்பதில் எம்.ஜி.ஆருக்கு முன்னோடியாக விளங்கிய என்.எஸ்.கிருஷ்ணன்.. இவ்வளவு தாராள மனசா..?

By John A

Published:

கலையுலகில் என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு கலைஞனாக மட்டுமின்றி கலைவாணராகவும், மூட நம்பிக்கைகளை அகற்றும் கருத்துக்களை காமெடியாகவும் கூறி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். இயலாதோருக்கும், இல்லையென்று வந்தோருக்கும் வாரி வாரிக் கொடுத்தவர். அள்ளிக் கொடுப்பதில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார் கலைவாணர்.

மேலும் கணவனின் குணம் அறிந்து இவரது மனைவி மதுரமும் அவருக்கு உறுதுணையாகத் திகழ்ந்தார். திரையுலகில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள படங்கள் 150-க்கும் மேல். ஒரு தம்பதிகள் ஒன்றாக இணைந்து இத்தனை படங்கள் நடித்தது கின்னஸ் சாதனைப்புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.

ஒருமுறை என்.எஸ்.கிருஷ்ணன் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு பல்வேறு உதவிகள் செய்திருக்கிறார். இவர் மருத்துவமனையில் இருந்த நேரத்தில் பலர் வந்து அவரிடம் நலம் விசாரித்துவிட்டுச் சென்றிருக்கின்றனர். ஆனால் எம்.ஜி.ஆர். வரவில்லை. எனவே எம்.ஜி.ஆரை அவரே வரச் சொல்லியிருக்கிறார். ஏனெனில் எம்.ஜி.ஆருக்கு கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக.

அந்தவகையில் எம்.ஜி.ஆரும் வந்து என்.எஸ்.கிருஷ்ணனை பார்த்துவிட்டு மருத்துவச் செலவுக்கு பணமும் கொடுத்து உதவியிருக்கிறார். ஆனால் அந்த நேரத்தில் என்.எஸ்.கே. நீங்கள் கொடுத்த பணத்தை சில்ரையாகக் கொடுத்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் யாராவது கேட்டால் கொடுக்க வேண்டும் அல்லவா..! என்று கூற எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போனாராம்.

பெயர் குழப்பத்தால் வந்த மாற்றம்.. கூத்துப்பட்டறையில் உருவான இரண்டு ஹீரோக்கள்.. அது இவங்க தானா?

மேலும் என்.எஸ்.கே-வின் மேனேஜர் ஒருமுறை வருமான வரி அலுவலகத்திற்குச் சென்று அவரின் சம்பள கணக்கு வழக்கை கொடுத்திருக்கிறார். அப்போது நிறைய தான தர்மங்கள் வழங்கியதை அந்த மேலாளர் கணக்கில் கொண்டு வர அதை அந்த அலுவலர் நம்பவில்லை. எனவே என்.எஸ்.கே-வை சோதிக்க விரும்பிய அவர் ஒருநாள் அவர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். தன்னை யாரென்று அறிமுகப்படுத்திக் கொள்ளாமல் தன் மகளுக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. எனவே திருமணச் செலவுகளுக்கு சற்று பணம் தேவைப்படுகிறது.

எனவே நீங்கள் கொடுத்து உதவினால் நன்றாக இருக்கும் என்று சொல்ல, அப்போது என்.எஸ்.கே. அவரிடம் சற்று பொறுங்கள் எனது மேலாளர் வருமான வரி அலுவலரைப் பார்க்கப் போயிருக்கிறார். எனவே அவர் வந்தவுடன் உங்களுக்குத் தருகிறேன் என்று கூற அவர் நெகிழ்ந்து போய் தான் யார் என்பதைக் கூறியிருக்கிறார்.

இப்படி தான் வாழ்ந்த காலத்தில் கலியுக கர்ணனாகவே வாழ்ந்து மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்றிருக்கிறார் என்.எஸ்.கிருஷ்ணன்.