டப்பிங் படத்தை ஒரிஜினல் படம் போல் மாற்றிய தாணு.. சிவாஜியின் காட்சி மட்டும் தான் புதுசு..!

By Bala Siva

Published:

கலைப்புலி எஸ் தாணு அவர்கள் கலையில் மட்டும் புலி அல்ல, வியாபாரத்தில் புலி என்பதை பல நேரங்களில் நிரூபித்துள்ளார். ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்து அவரை மிகப் பெரிய லெவலுக்கு கொண்டு சென்றவர். இவர் தன்னுடைய அனைத்து படங்களையும் பிரம்மாண்டமாக விளம்பரம் செய்வார். சின்ன நடிகர்களுக்கு கூட கட் அவுட் வைப்பார்.

குறிப்பாக யார் என்ற திரைப்படத்தை தாணு தயாரித்தபோது அந்த படத்தின் நாயகன் அர்ஜுனுக்கு சென்னை மவுண்ட் ரோட்டில் மிக 100 அடியில் பிரம்மாண்டமாக கட் அவுட் வைத்தார். அந்த வகையில் அவர் வியாபாரத்தில், விளம்பரத்தில் வித்தியாசமாக யோசிப்பார்.

அதேபோல் சினிமாவிலும் பல தந்திரங்களை புகுத்தி அவர் அதிக பணம் சம்பாதித்ததாகவும் கூறப்பட்டது. அந்த வகையில் தெலுங்கில் அர்ஜுன் நடித்த சூப்பர் ஹிட் படம் ஒன்றை தமிழில் ரீமேக் செய்வதாக கூறிய தாணு, அந்த படத்தை கிட்டத்தட்ட டப்பிங் தான் செய்தார் என்று கூறப்படுவதுண்டு.

12 வயதில் சிவாஜி ரசிகை.. சினிமாவே வேண்டாம்.. அமெரிக்கா சென்ற நடிகை பிரமிளா..!!

அர்ஜுன் மற்றும் சௌந்தர்யா நடித்த சுபவர்தா என்ற தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்ய அர்ஜுன் முடிவு செய்தார். அந்த படத்தை தானே தயாரிப்பதாக ஒப்புக்கொண்ட தாணு, ஒரிஜினல் படத்தில் உள்ள காட்சிகளை பெரும்பாலும் பயன்படுத்திக் கொண்டு ஒரு சில காட்சிகளை மட்டும் தமிழில் எடுக்கலாம் என்று ஐடியா கொடுத்தார்.

சுபவர்தா திரைப்படத்தில் சந்திர மோகன் நடித்த கேரக்டரில் சிவாஜி கணேசனை தமிழில் நடிக்க வைத்தார். சந்திரமோகன் என்பவர் எம்ஜிஆர் நடித்த நாளை நமதே என்ற திரைப்படத்தில் எம்ஜிஆரின் தம்பியாக நடித்திருப்பார். சந்திரமோகன் நடித்த கேரக்டரை மட்டும் சிவாஜியை வைத்து எடுத்து அர்ஜூன், செளந்தர்யா நடித்த தெலுங்கு பட காட்சிகளை அப்படியே தமிழுக்கு தாணு பயன்படுத்தியதாக கூறப்பட்டது.

மன்னவரு சின்னவரு என்ற டைட்டில் வைக்கப்பட்ட இந்த படம் 80% டப்பிங் படம் எனவும் சிவாஜிகணேசன் நடித்த காட்சிகள் மட்டுமே புதிதாக எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இருப்பினும் இந்த படத்தை தெலுங்கு படத்தின் ரீமேக் என்று தாணு விளம்பரப்படுத்தியதாகவும் இதனால் இந்த படத்தின் பட்ஜெட் வெகுவாக குறைந்ததாகவும் கூறப்பட்டது.

ஒரே நாளில் 2 படங்களில் அறிமுகமான நடிகை.. அறிமுகம் செய்த இயக்குனருடன் திருமணம்.. பல்லவியின் திரைப்பயணம்..!

சிவாஜிகணேசன், அர்ஜுன், சௌந்தர்யா, மகேஸ்வரி, விசு, கேஆர் விஜயா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தார். டைட்டிலில் போட்டதிலிருந்து இந்த படம் தெலுங்கு படத்தின் டப்பிங் என்பதை தெரிந்து கொண்டிருக்கலாம்.

இந்த படம் கடந்த 1999 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியானது. சுமாராக இந்த படம் வசூல் செய்தாலும் கூட தாணு அவர்களுக்கு இந்த படத்தின் பட்ஜெட் மிகவும் குறைவு என்பதால் நல்ல லாபம் கிடைத்ததாகவும் கூறப்பட்டது.

சிவாஜி கணேசன் நடித்த ஒரு படமாவது தயாரிக்க வேண்டும் என்று நீண்ட நாளாக கனவு கண்டிருந்த தாணுவுக்கு இந்த படம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. ஏற்கனவே சிவாஜிகணேசன் நடித்த எதிரொலி, பிராப்தம், ராஜபக்தி, படிக்காத மேதை, குங்குமம், படித்தால் மட்டும் போதுமா, மரகதம், கல்யாணியின் கனவு, போன்ற படங்களை அவர் விநியோகிஸ்தராக இருக்கும் போது வாங்கி விநியோகம் செய்துள்ளார்.

இந்த நிலையில் தான் இந்த படத்திற்காக சிவாஜியை அவர் அணுகியபோது உடல்நலம் குறைவாக இருந்த போதிலும் தாணுவே நேரடியாக வந்து கேட்டதால் இந்த படத்தில் மட்டும் சிவாஜி நடிக்க ஒப்புக்கொண்டார். இந்த படத்திற்கு பிறகு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ஒரே படம் படையப்பா தான்.

3 கேரக்டர்கள் மட்டுமே.. 175 நாட்கள் ஓடிய வெற்றிப்படம்.. 10 மடங்கு லாபம்.. காவிய திரைப்படம் நெஞ்சில் ஓர் ஆலயம்..!

மன்னவரு சின்னவரு படம் 80 சதவீத டப்பிங் படம் என்பது திரை உலகில் உள்ள பலருக்கே தெரியாது. அதுதான் கலைப்புலி எஸ் தாணுவின் வியாபார தந்திரம்.