ஒரு ஹிட் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கும் அளவிற்கு பெயர் பெற்றது என்றால் அந்தப் பாடல் ‘ஒவ்வொரு பூக்களுமே..‘ பாடல் தான். ஆட்டோகிராப் திரைப்படத்தில் பாடலாசிரியர் பா.விஜய்யின் வரிகளில், சித்ராவின் குரலில் தன்னம்பிக்கை ஊட்டிய இந்தப் பாடலுக்கு பரத்வாஜ் இசையமைத்திருப்பார்.
இன்றுவரை தோல்வியில் துவண்டவர்களுக்கு வெளிச்சம் காட்டும பாடலாக கண்ணதாசனின் ‘மயக்கமாக கலக்கமா மனதிலே குழப்பமா..‘ என்ற பாடலுக்குப் பிறகு இந்தப் பாடல்தான் ஞாபகத்திற்கு வரும்.
எந்த வயதினற்குரியவர்களும் கேட்டு தன்னம்பிக்கையை வளர்த்த்துக் கொள்ளும் இந்தப் பாடல் 2004 -ஆம் ஆண்டிற்கான தேசிய விருதினை பா.விஜய்க்குப் பெற்றுக் கொடுத்தது. தனது கவிதைத் தொகுப்பில் இருந்த பாடலையே திரைப்படத்திற்காக பயன்படுத்தி இருப்பார் பா.விஜய்.
ஒருமுறை சென்னை காமராஜர் அரங்கில் பா.விஜய் எழுதியிருந்த கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவிற்குத் தலைமை தாங்கியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி. அப்போது ஆட்டோகிராப் படத்தின் இடம் பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடல் வெளியாகி பெரும் வெற்றி பெற்று தேசிய விருதும் பெற்றிருந்தது.
அந்த விழாவிற்கு கவிஞர் வாலியும் பங்கேற்றிருந்தார். பா.விஜய்யின் இந்தப் பாடலில் திருவிளையாடலில் நக்கீரர் பாட்டில் பிழை கண்டுபிடிப்பதைப் போல் ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலில் பிழையைக் கண்டுபிடித்திருக்கிறார் கலைஞர். பாட்டின் ஆரம்பமே ஒவ்வொரு பூக்களுமே என ஒருமை, பன்மையாக இலக்கண மீறல் இருக்கிறதே என்று வாலியிடம் கேட்டுள்ளார்.
அப்போது கவிஞர் வாலி, அவ்வாறு இருக்கலாம் தவறு இல்லை.. ‘ஆயிரம் வாசல் இதயம்‘ என்று கண்ணதாசனே எழுதியிருகிறார் எனவும், மேலும் ஆயிரம் நிலவே வா என்றெல்லாம் பாடல்கள் இருப்பதை சுட்டிக் காட்டியிருக்கிறார் வாலி. எனவே அதுபோன்று தான் ஒருமை பன்மையில் ‘ஒவ்வொரு பூக்களுமே‘ பாடலும் எழுதப்பட்டிருக்கிறது என்று வாலி விளக்கம் கொடுத்துள்ளார்.
இவ்வாறு பாடலில் ஒரு சிறிய இலக்கணப் பிழையைக் கூட கூர்ந்து கவனித்து கலைஞர் கேட்டுத் தெரிந்து கொண்டது அவரின் தமிழ் ஆர்வத்திற்கு ஓர் எடுத்துக்காட்டான சம்பவமாக விளங்கியிருக்கிறது.