தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் கே. பாக்யராஜ். திரைக்கதையின் தந்தை என அறியப்படும் பாக்யராஜ் திரைப்படத்தில் வரும் கதை மற்றும் வசனங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்ந்து மக்களை கவர்ந்து கொண்டே இருந்ததால் அவருடைய காலத்தில் மிகப்பெரிய வெற்றி இயக்குனராகவும் வலம் வந்தார்.
பெரும்பாலும் இவர் இயக்கும் படங்களில் இவரே நடிகராகவும் நடிப்பதால் தன்னுடைய திரைக்கதைக்கு ஏற்ப நடிப்பையும் இவரால் வெளிப்படுத்தி மக்கள் மனதையும் வெகுவாக கவர முடிந்தது. இதே போல மற்ற பல இயக்குனர்களின் திரைப்படத்திலும் அதிகம் நடித்து வந்த கே பாக்யராஜ், தற்போது திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகராக தனது பயணத்தை தொடங்கிய பாக்யராஜ், சுவரில்லாத சித்திரங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து அந்த ஏழு நாட்கள், முந்தானை முடிச்சு உள்பட 25 திரைப்படங்களுக்கு மேல் இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இவர் கடைசியாக தனது மகன் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவான ‘சித்து பிளஸ்2’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
கடந்த 2023 ஆம் ஆண்டிலும் காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம், தாதா உள்ளிட்ட பல திரைப்படங்கள் நடித்திருந்தார் பாக்யராஜ். இந்த நிலையில், ராசுக்குட்டி என்ற திரைப்படத்தை பாக்யராஜ் இயக்கிய சமயத்தில் அதற்கு முன்பாக லொகேஷன் பார்க்க சென்றபோது நடந்த காமெடி சம்பவம் பற்றி தற்போது நினைவுகூர்ந்துள்ளார்.
ராசுக்குட்டி படத்தின் முதல் காட்சியில் ஒருவர் மரத்தை வெட்டும் போது பாட்டி ஒருவர் குழந்தையை கீழே போடும் காட்சி வரும். இதற்காக வீடு மற்றும் மரம் அருகே இருக்குமாறு லொக்கேஷன் ஒன்றை தேடி உள்ளனர். அப்போது, பாக்யராஜ் எதிர்பார்த்தபடி வீடும் மரமும் அருகருகே இருந்த இடம் ஒன்று கிடைத்துள்ளது.
அந்த வீட்டிற்காக செல்லும் வழியில் டியூப் லைட்டுகள் கட்டியபடி இருக்க சற்று குழப்பத்துடனே அந்த வீட்டிற்கு பாக்யராஜ் மற்றும் அவரது அசிஸ்டன்ட் இயக்குனர்கள் சென்றனர். அப்போது அருகே போனதும், ஒரு புகைப்படம் அங்கே வைக்கப்பட்டிருக்க அந்த வீட்டில் இருந்த யாரோ ஒருவர் இறந்து போனதும் தெரிய வந்துள்ளது. இறந்து போனவருக்கு பாக்யராஜ் நண்பர் என நினைத்து அங்கே அழுது கொண்டிருந்த ஒருவர், ‘இப்படி ஒரு நட்பு இருக்கறதை பத்தி சொல்லாம போய் சேர்ந்துட்டானே’ எனக்கூறி பாக்யராஜிடம் அழுததும் அவர் ஒன்றும் புரியாமல் முழித்துள்ளார்.
தொடர்ந்து அவரின் இறப்பு பற்றி அந்த பெண்ணும் அழுது கொண்டே பேசியபடி இருக்க, சாப்பிட்டு விட்டு தான் போனும் என்றும் பாக்யராஜிடம் கூறி உள்ளார். அவர் கிளம்புவதற்கு தயாராக, ‘அவன் உயிரோட இருந்திருந்தா உங்களை சாப்பிடாம அனுப்பி இருப்பானா’ என லொக்கேஷன் பார்க்க வந்த பாக்யராஜ், துக்கம் விசாரிக்க வந்தவர் என கருதி அழுதுள்ளார்.
அதன் பின்னர் எப்படியோ அங்கிருந்த பாக்யராஜ் மற்றும் அவரது அசிஸ்டன்ட் இயக்குனர்கள் தப்பித்து வந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.