நடிகரும் இயக்குனருமான கே.பாக்யராஜின் படங்கள் என்றாலே குறிப்பாக தாய்க்குலங்களின் பேராதரவு நிச்சயமாக இருக்கும். 80களில் அவர் கொடுத்த அத்தனை படங்களுமே சூப்பர் ஹிட் தான். திரைக்கதையில் அவரை மன்னன் என்பார்கள். அந்த அளவுக்கு அவரது படங்கள் அத்தனையும் காட்சிக்குக் காட்சி நம்மை ரசிக்கத் தூண்டும் வகையில் அமைந்திருக்கும்.
இயக்குனர் பாரதிராஜா தான் பாக்யராஜின் குருநாதர். பொதுவாகவே ஒரு உதவி இயக்குனர் முதல் படத்திலேயே இயக்குனரிடம் நெருக்கமாகி விட முடியாது. ஆனால் இந்த விஷயத்தில் பாக்யராஜ் விதிவிலக்கு. குருநாதரிடம் உதவி இயக்குனராக சேர்ந்த முதல் படத்திலேயே அவரது நம்பிக்கையைப் பெற்று விட்டாராம்.
குறிப்பாக, பாக்யராஜ் எழுதும் வசனங்கள் பாரதிராஜா படத்தின் பிளஸ் பாயிண்டுகள் ஆனது. அது படத்தின் வெற்றிக்கு வழிவகுத்தது. அதே போல ஹீரோவாக மாற எந்த லட்சணமும் இல்லாமல் இருந்த பாக்யராஜைத் தைரியமாக தனது புதிய வார்ப்புகள் படத்தில் ஹீரோவாக்கினார் பாரதிராஜா.
நடிகர் ராஜேஷ் பாக்யராஜைப் பற்றி இப்படி சொல்கிறார். இயக்குனர் பாக்யராஜைப் போல எந்த ஒரு இயக்குனரையும் நான் சந்தித்தது இல்லை. எளிய மனிதர்களின் வாழ்வை சுவாரசியமாக சொல்லி விடுகிறார். அந்த ஏழு நாட்கள் படம் என் வாழ்வில் ஒளியேற்றியது என்கிறார்.

பொதுவாக இயக்குனர்கள் நாம் ரெண்டே படங்களில் செட்டில் ஆகி விட வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் பாக்யராஜோ தனது எழுத்தையும், கதையையுமே காதலித்தார் என்று சொன்னால் மிகையில்லை. அவர் தயாரிப்பாளர்களைத் தேடிப் போகவில்லை. எளிய மனிதர்களையே தயாரிப்பாளர்களாக மாற்றினார்.
80களில் கூட கொடிகட்டிப் பறந்த இளையராஜாவின் பின்னாலே போகாமல், தனது சுவரில்லாத சித்திரங்கள் படத்திற்கு மௌன கீதங்கள் படங்களுக்கு கங்கை அமரனை இசை அமைக்க வைத்தார்.
பாடல்கள் எல்லாமே ஹிட்டானது. பாக்யராஜிடம் உள்ள ஒரு ஸ்பெஷல் என்னன்னா… அவரை எவ்வளவோ பேர் வேறு மொழிகளில் படங்களை ரீமேக் பண்ணச் சொன்னார்களாம். ஆனாலும் அதற்கு சற்றும் அசராமல் என்னத்தை ஒரே படத்தைப் போயி திரும்ப திரும்ப எடுத்துக்கிட்டு… அந்த நேரத்துல இன்னொரு படத்தையே நான் உருவாக்கி விடுவேன் என்று அசால்டாக சொன்னாராம்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


