தமிழ் சினிமா மட்டுமில்லாமல், இந்திய திரை உலகிலேயே சூப்பர்ஸ்டார் என்றால் அந்த டைட்டில் ரஜினியை தவிர வேறு யாருக்கும் நிச்சயம் சரியாக பொருந்தாது. தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து ஏறக்குறைய 50 ஆண்டுகளை நெருங்கும் ரஜினிகாந்த், இன்னும் அதே எனர்ஜியுடன் நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம், மிகப் பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்திருந்தது. இதனைத் தொடர்ந்து தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான லால் சலாம் படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.
இதனையடுத்து, ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்திலும் ரஜினிகாந்த் அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா டகுபதி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, அக்டோபர் மாதம் வேட்டையன் திரைப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள ரஜினிகாந்த், மாரி செல்வராஜ் இயக்கத்திலும், நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்திலும் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த வயதிலும் தொடர்ந்து பிஸியாகவே ரஜினிகாந்த் இருப்பதால் தான் இன்னும் சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை அவரை தவிர வேறு யாரும் நெருங்க முடியாத அளவுக்கு இருந்து வருகிறார்.
அப்படி ஒரு சூழலில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அண்ணாமலை படத்திற்கு பின் இருக்கும் ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை பற்றி தற்போது பார்க்கலாம். நடிகர் ரஜினிகாந்தை சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்த இயக்குனர் தான் கே பாலச்சந்தர். அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலம் நடிகர் என்ற அந்தஸ்தை பாலச்சந்தர் ரஜினிக்கு கொடுத்திருந்தார்.
இதனிடையே, சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை என்ற படத்தை தனது கவிதாலயா தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார் பாலச்சந்தர். இந்த படம் ரஜினிகாந்த் திரை பயணத்தில் முக்கியமாக அமைந்திருந்ததுடன் அதில் வரும் “அசோக்” என ஆவேசத்துடன் சூப்பர் ஸ்டார் பேசும் வசனத்தை சொல்லி தான் நடிகராகும் வாய்ப்பை விஜய் தனது தந்தையிடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த அண்ணாமலை திரைப்படத்தில் எமோஷனல், ஆக்ஷன், காமெடி என அனைத்துமே அசத்தலாக அமைந்திருந்ததால் இந்த படமும் பெரிய வெற்றியை பெற்றிருந்தது. இதனிடையே, அண்ணாமலை படத்தின் தயாரிப்பாளராக மட்டுமில்லாமல் இன்னொரு சம்பவத்தை பாலச்சந்தர் செய்தது பற்றி தற்போது பார்க்கலாம்.
அண்ணாமலை படத்தின் திரைக்கதையை சண்முகசுந்தரம் தான் எழுதி இருந்தார். ஆனால், ரஜினிகாந்த் மற்றும் வினு சக்கரவர்த்தி ஆகியோர் பேசும் காட்சியில் வரும் வசனங்களை மட்டும் பாலச்சந்தர் எழுதி இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. தயாரிப்பாளர் என்றவுடன் அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் படத்தில் தேவைப்படும் நேரத்தில் தனது உதவியை பாலச்சந்தர் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.