புதுமுகங்களை வைத்து படம் எடுப்பதற்கு தனி தைரியம் வேண்டும். இதைத் திரையில் அசால்ட்டாகச் செய்து தடம் பதித்தவர்கள் இரு ஜாம்பவான்கள் ஒருவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா, மற்றொருவர் இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர். இவற்றில் கே. பாலச்சந்தர் ரஜினி, கமல் மட்டுமல்லாது பலருக்கு சினிமாவில் குருவாகத் திகழ்ந்தார். தன்னுடைய முதல் படமான நீர்க்குமிழியில் அப்போது எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றோர் உச்சத்தில் இருந்த நேரத்தில் நாகேஷ்-ஐ கதாநாயகனாக வைத்து வெற்றி கண்டவர். அதன்பிறகு மீண்டும் நாகேஷ் நடிப்பில் சர்வர் சுந்தரம் என்ற மெஹா ஹிட் படத்தையும் கொடுத்தார்.
கே.பாலச்சந்தர் படம் என்றாலே சமூகக் கருத்துக்கள் இருக்கும் என்று இருந்த வேளையில் அவருக்கு திடீரென ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு 6 மாதங்களாக வீட்டில் முடங்கிக் கிடந்தார். அப்படி முடங்கியவரை மீண்டும் வீறு கொண்டு எழச் செய்து திரையில் பல பரிணாமங்களை நிகழ்த்தச் செய்தது அவருடைய தைரியம். ஹார்ட் அட்டாக் வந்த பிறகு பல வெற்றிப் படங்களையும், சமூகப் படங்களையும் கொடுத்தார். அவற்றில் ஒன்றுதான் அவள்ஒரு தொடர்கதை.
இப்படம் பற்றி பாலச்சந்தர் பேட்டி ஒன்றில் கூறுகையில், “ஹார்ட் அட்டாக்குக்குப் பிறகு நான் எடுத்த முடிவுகளில் ஒன்று புதுமுகங்களை அறிமுகப்படுத்துவது… “அவள் ஒரு தொடர்கதை’ படத்துக்கு நடிகர்களை தேர்வு செய்த போது ஒரு படத்தில் தலை காட்டியிருந்தாலும் அவர்களைத் தவிர்த்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தேன்.
அந்தப் படத்தில் ஒரே ஒரு விதிவிலக்கு கமல்ஹாசன். அந்த விகடகவி வேடத்துக்கு எனக்குச் சரியான ஆள் கிடைக்கவில்லை. அந்த வேடத்தை கமலைத் தவிர வேறு யார் செய்திருந்தாலும் சரியாக இருக்காது என்றும் தோன்றியது. யாரை நம்பி அந்த வேடத்தை நான் ஒப்படைக்க முடியும்? அதனால் அவரை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற எல்லாரையும் புதுமுகங்களாக தேர்வு செய்தேன்.
அந்தப் படத்தில் நடித்த சுஜாதா, ஜெய்கணேஷ், ஸ்ரீப்ரியா எல்லாருமே பின்னாளில் பிரபலமானார்கள்.நான் தியேட்டரில் இருந்து வந்தவன். தியேட்டரில் ஒழுக்கம் முக்கியம். அதில் ரொம்ப கண்டிப்பாக இருப்பேன். அதனால் ஆரம்பித்திலிருந்தே எனக்கு செகர்யமான நடிகர்களை வைத்து படம் எடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தேன்.
போகப் போக அதைத் தளர்த்திக் கொள்ள வேண்டியிருந்தது வேறு விஷயம். சொல்லப் போனால் புதுமுகங்களை அறிமுகப்படுத்துவது ஸ்ரீதர் பாணி. அவர் நிறைய புதுமுகங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பார். அதைத் தொடர்ந்து நானும் புதுமுகங்களைத் தேட ஆரம்பித்து, பாலசந்தர் படம் என்றால் புதுமுகங்கள் இருப்பார்கள் என்று பேசும் அளவுக்குப் போனது. பாலசந்தர் படம் என்று மக்கள் மனதில் ஒரு எதிர்பார்ப்புக்கும் அதுவே காரணமானது. இல்லையென்றால் சிவாஜி படம், எம்.ஜி.ஆர். படமாகத்தான் பேசியிருப்பார்கள்.
புது முகங்கள் என்ற போது அவர்களுக்குச் சொல்லித் தர மிகவும் அவகாசம் இருந்தது. முழுமையாகத் தயார் செய்ய முடிந்தது. நூறு சதவீதம் அவர்களைத் தயார் செய்தேன். வெற்றியும் நூற்றுக்கு நூறாக அமைந்தது. அதனால்தான் “அவர்கள்’ படத்தில் சுஜாதாவை அனுவாகவும் ரஜினியை ராமநாதனாகவும் மக்கள் இன்னமும் ஞாபகம் வைத்திருக்கிறார்கள்.“ என்று அந்தப் பேட்டியில் கே.பி. கூறினார்.