அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த ஐந்தாம் தேதி வெளியான நிலையில், ஐதராபாத்தில் உள்ள தியேட்டருக்கு அவர் வருகை தந்தார். அப்போது ஏற்பட்ட ரசிகர்கள் கூட்ட நெரிசலால் ரேவதி என்ற பெண் பரிதாபமாக பலியானார். இதனை அடுத்து, அல்லு அர்ஜுன் நேற்று கைது செய்யப்பட்டார்.
அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இந்த விசாரணையின் போது, “அல்லு அர்ஜுனை உடை மாற்ற கூட அனுமதிக்கவில்லை; அவருக்குரிய அடிப்படை உரிமைகளையும் செயல்படுத்த அனுமதி வழங்கப்படவில்லை” என வாதிடப்பட்டது.
மேலும் தியேட்டரில் நடந்தது ஒரு அசம்பாவிதம். அதற்கு அல்லு அர்ஜுன் எப்படி பொறுப்பேற்க முடியும்? அல்லு அர்ஜுன் அங்கு வருவது காவல்துறைக்கு முன்பே தெரிவிக்கப்பட்டு இருந்தும், காவல்துறை தான் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை” என்று அவரது தரப்பினர் வாதாடியுள்ளனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “அல்லு அர்ஜுன் கைது விவகாரத்தில் அவரை நடத்திய விதம் சரியில்லை. ஒரு குடிமகனாக சுதந்திரமாக வாழ்வதற்கு அவருக்கு உரிமை உள்ளது. நடிகர் என்ற ஒரே காரணத்துக்காக அவரது உரிமைகளை பறிக்க கூடாது. எனவே, அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிடுகிறேன்” என்று நீதிபதி தெரிவித்தார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
