தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக கடந்த 1960-ல் களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமாகி முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான ஜனாதிபதி தங்கப் பதக்கம் பெற்றவர்தான் நடிகர் கமல்ஹாசன். அம்மாவும் நீயே.. அப்பாவும் நீயே.. என அப்பாவியாக பால் வடியும் முகத்துடன் வந்து இரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திழுத்தார். அதன்பின் எம்.ஜி.ஆருடன் ஆனந்த ஜோதி படத்தில் நடித்தார்.
பிறகு இளமைப் பருவத்தில் தங்கப்பன் மாஸ்டரிடம் நடன உதவி இயக்குநராக பணியாற்றினார். அதன்பிறகு துணை இயக்குநராக இருந்தவரை நீ சாதிக்க வேண்டிய இடம் இதுவல்ல என்று கரம்பிடித்து கே.பாலச்சந்திரிடம் அறிமுகப்படுத்தியது காதல் மன்னன் ஜெமினிகணேசன் தான்.
இதுகுறித்து கமல் பேட்டி ஒன்றில் குறிப்பிடும் போது, “நான் சந்தித்த முதல் சினிமா நடிகர் ஜெமினிகணேசன் தான். அப்போது எனக்கு மூன்றரை வயது. என்னைப் பார்த்த உடனே அவர் தூக்கிக் கொஞ்ச ஆரம்பித்து விட்டார். ஆனால் நானோ ஜெமினிகணேசனைப் பார்த்ததே இல்லை. அதனால் அவர் தான் ஜெமினி கணேசன் என்றே எனக்குத் தெரியாது. இவர் வேறு யாரோ என்று நினைத்துக் கொண்டேன். அதன்பிறகு தான் தெரிந்தது. சாவித்திரி அம்மா ஓடி வந்தாங்க. இது யாரு என்று என்னைக் கொஞ்சினாங்க. நான் அவரை மாமான்னு தான் அழைப்பேன்.
என் கூட யதார்த்தமா விளையாடிக் கொண்டே எனக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது அவர் தான். நான் டை கட்ட ஆரம்பித்ததே அவரால் தான். வேட்டியே கட்டத் தெரியாத எனக்கு அதை சொல்லிக் கொடுத்தது அவர் தான். அதே போல அன்னை வேளாங்கன்னி படத்தில் துணை இயக்குனராக வேலை பார்த்தேன். அப்போது என்னிடம் அவரே வந்து பேசினார். நீ தானே அது என்றார். ‘இங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்கே’ன்னு கேட்டார். அசிஸ்டண்ட் டைரக்டர்னு சொன்னேன். ’இதுக்காடா நீ வந்தேன்‘னு கேட்டார். உடனே காரில் அழைத்துச் சென்று பக்கத்து ஸ்டூடியோவுக்குப் போனார்.
அங்கு வேற ஒரு இயக்குனரிடம் அறிமுகப்படுத்தினார். ‘இந்தப் பையன் நடிக்கணும்’ என்றார். அந்த இயக்குனர் ‘இந்த பையன் நடிக்கணும்னு ஆசைப்படுறானா?’ன்னு கேட்டார். ‘இல்ல நான் ஆசைப்படுறே’ன்னு ஜெமினிகணேன் சொன்னார். அதை என்னால் மறக்கவே முடியாது. அவர் என்னை எந்த இயக்குனரிடம் அழைத்துக் கொண்டு போனார் தெரியுமா? அவர் தான் கே.பாலசந்தர்’ என கமல் கூறியிருந்தார். இப்படி ஜெமினி கணேசன் கே.பாலச்சந்தரிடம் கமலை அறிமுகப்படுத்தியிருக்காவிட்டால் இன்று நமக்கு ஓர் உலக நாயகன் கிடைத்திருக்க மாட்டார்.