தமிழ் திரை உலகின் அழியாத காதல் காவியங்களில் ஒன்று ’வசந்த மாளிகை’. சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது பலர் அறிந்ததே. ஆனால் இந்த படத்தில் முதலில் சிவாஜி கணேசன் ஜோடியாக ஜெயலலிதா தான் நடிக்க இருந்ததாகவும், ஆனால் ஜெயலலிதாவால் இந்த படத்தில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் வாணிஸ்ரீ நடிக்க வந்ததாகவும் கூறப்படுவதுண்டு. அது குறித்து தற்போது பார்ப்போம்.
‘வசந்த மாளிகை’ திரைப்படத்தின் நாயகியாக முதலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் ஜெயலலிதாவின் தாயார் காலமானார். இதனால், ஜெயலலிதா படப்பிடிப்பில் கலந்துகொள்வாரா என்ற சந்தேகம் தயாரிப்பாளர் ராமாநாயுடுவுக்கு ஏற்பட்டது. அப்போது, ராமாநாயுடு கதாநாயகி கதாபாத்திரத்திற்காக வாணிஸ்ரீயை அணுகினார். இந்த திரைப்படம் ஏற்கெனவே தெலுங்கில் ‘ப்ரேம் நகர்’ என்ற பெயரில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றிருந்தது. அந்தப் படத்திலும் வாணிஸ்ரீ தான் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவாஜி கணேசனுக்கு அருகில் ஒரு பனிக்கட்டி போல்…
‘வசந்த மாளிகை’ படத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடிப்பது குறித்து வாணிஸ்ரீக்கு மிகுந்த தயக்கம் இருந்தது. “சிவாஜி என்னும் இமயமலைக்கு அருகில் நான் ஒரு பனிக்கட்டி போல் ஆகிவிடுவேனோ என அஞ்சினேன்” என்று அவர் தனது அச்சத்தை வெளிப்படுத்தினார்.
ஆனால், தயாரிப்பாளர் ராமாநாயுடு அவரை ஊக்குவித்தார். “தெலுங்கில் நீதானே நடித்தாய். பயப்படாதே” என்று கூறி தைரியப்படுத்தினார். அதைவிட, வாணிஸ்ரீயின் தாயார் அவருக்கு அளித்த ஊக்கம் தான் மிக முக்கியமானது. “சாவித்திரி, சரோஜாதேவி போல வாணிஸ்ரீ ஒருத்தி தான். நீ யாருக்கும் சளைத்தவள் அல்ல. இந்த கதாபாத்திரத்தை வாணிஸ்ரீயை போல் யாராலும் செய்ய முடியாது என்று நீ நிரூபிக்க வேண்டும்” என்று அவர் வாணிஸ்ரீக்கு நம்பிக்கை அளித்தார். தாயின் இந்த உற்சாகமான வார்த்தைகளை அடுத்து, அவர் அந்தக் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டார்.
வசந்த மாளிகை’ பட அனுபவம்
‘வசந்த மாளிகை’ படத்தில் நடிக்க வாணிஸ்ரீக்கு 17 வயதிருந்தது, படம் வெளியாகும் போது அவருக்கு 18 வயதாகிவிட்டது. ஆனால் இந்த படத்தில் சிவாஜி நடிக்கும்போது அவருக்கு 44 வயது.
இந்தப் படத்தில் சிவாஜி கணேசனின் நடிப்புக்கு ஈடுகொடுத்து நடிப்பது அவருக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது. ஆனால், தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி, அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தார் வாணிஸ்ரீ. இத்திரைப்படம் தமிழகத்தில் மட்டுமின்றி இலங்கையிலும் மாபெரும் வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி, இத்திரைப்படம் வாணிஸ்ரீயின் திரை வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இன்றும், ‘வசந்த மாளிகை’ திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களால் போற்றப்படும் ஒரு கிளாசிக் படமாகத் திகழ்கிறது.
வசந்த மாளிகை வெளியான 1972ல் சிவாஜி, ஜெயலலிதா நடித்த ’பட்டிக்காடா பட்டணமா’ படமும் வெளியானது. அதற்கு முன்பு சில மாதங்களுக்கு முன்பு இருவரும் இணைந்து நடித்த ’ராஜா’ வெளியானது. அதற்கு முன்பு ’சவாலே சமாளி’ ’எங்கிருந்தோ வந்தாள்’ ’தெய்வமகன்’ உள்ளிட்ட சில படங்களிலும் சிவாஜி, ஜெயலலிதா ஜோடியாக நடித்திருந்தனர். அதேபோல் ’வசந்த மாளிகை ’படத்திலும் ஒருவேளை சிவாஜிக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பது குறித்து உங்கள் கருத்தை தெரிவியுங்கள்
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
