பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக ஆறு போட்டியாளர்கள் வந்ததற்கு பின்னர் நிகழ்ச்சி டாப் கியர் எடுக்கும் என்று தான் அனைவருமே எதிர்பார்த்தனர். ஆனால் அவர்கள் வந்த பின்னர் இருந்ததை விட மிக மோசமாக பிக் பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருப்பதாக தான் அதிகம் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. ரியா, வர்ஷினி, மஞ்சரி, ரயான், ராணவ், சிவகுமார் என மொத்தம் ஆறு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருந்தனர்.
வந்த வேகத்தில் இந்த ஆறு போட்டியாளர்களும் ஏற்கனவே வீட்டில் இருந்தவர்களின் ஆட்டத்தை குறித்து பலவிதமான விமர்சனங்களையும் முன் வைத்திருந்தனர். ஆனால் அந்த விமர்சனத்திற்கு நிகராக தற்போது புதிதாக களமிறங்கியவர்களும் செய்து வருகிறார்கள் என்று தான் பார்வையாளர்களும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக விஜய் சேதுபதியின் முன்பே பார்வையாளர்கள் தங்களது குற்றங்களை முன்வைக்க இனிவரும் நாட்களில் அனைவரது ஆட்டமும் நிச்சயம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது.
இதற்கு முந்தைய சீசன்களில் எல்லாம் டாஸ்க் என வரும்போது அனைத்து போட்டியாளர்களுமே முழு ஈடுபாடுடன் களமிறங்குவார்கள். ஆனால் இந்த முறை பலரும் அதற்கான சுவாரஸ்யமும் இல்லாமல் பங்கேற்பதற்கான ஆர்வமும் இல்லாமல் இருப்பதாகவே தெரிகிறது. இதற்கிடையே புதிதாக வந்த போட்டியாளர்களில் மற்ற ஐந்து பேரை விட மஞ்சரி பல விஷயங்களில் தனது குரலை அதிகம் எழுப்புவதாகவே தெரிகிறது.
தப்போ, சரியோ தான் மனதில் நினைக்கும் விஷயத்தை மற்ற போட்டியாளர்களுக்கு முன் பேசுவதால் அவர் அவருக்கு ஆதரவும் அதே நேரத்தில் எதிர் கருத்தும் அதிகமாகவே உள்ளது. இதற்கு மத்தியில் தான் மஞ்சரி ஆட்டத்தை குறித்து ஜாக்குலின், பவித்ரா, சௌந்தர்யா உள்ளிட்டோர் பேசிய விஷயங்களும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
“எல்லா விஷயத்துலயும் அவ இன்புட் இருக்கணும்னு எதாவது ஒன்னு சொல்லிகிட்டே இருக்கா. சாதாரணமான விஷயமா இருந்தா கூட ஏதாவது சொல்லி பெருசு ஆக்குறா. எல்லாத்துலயும் எதிரா ஒன்னு சொல்லணும்னு யோசிக்குறாளோன்னு தோணுது” என மஞ்சரி பற்றி ஜாக்குலின் கூறுகிறார்.
இதனைத் தொடர்ந்து பவித்ரா, சவுந்தர்யா, ஆனந்தி, தர்ஷிகா என அனைவருமே புதிதாக வந்த போட்டியாளர்கள் தொடர்பாக தங்கள் கருத்தையும் முன் வைக்கின்றனர். இப்படி புதிய போட்டியாளர்களுக்கு எதிரானது போல பழைய பெண் போட்டியாளர்கள் தங்கள் கருத்தை முன்வைத்து வருவதால் இனிவரும் நாட்களில் இன்னும் இது சூடு பிடிக்கும் என்றே தெரிகிறது.