இசைஞானி இளையராஜா தமிழ்ப்படங்களில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யம் நடத்தி வருபவர். இப்போது சிம்பொனி வரை சென்று தனது தரத்தை மேலும் உயர்த்தி மெருகேற்றி உள்ளார். இவரது இசையை இயக்குனர்கள் எப்போதும் மிஸ் பண்ணிடக்கூடாது.
அதை ஏதாவது ஒரு இடத்தில் அந்தப் பாடலை வைத்து விட வேண்டும் என்று நினைத்து இயக்குனர்கள் வாங்கிப் பயன்படுத்திக் கொள்வார்களாம். ஒரு படத்தில் அந்தப் பாடலை வைக்க முடியாவிட்டால் வேறு எந்தப் படத்திலாவது அந்தப் பாடலை சேர்த்து விடுவார்களாம். இப்படி பல சம்பவங்கள் 80 மற்றும் 90களில் நடந்துள்ளது. அந்த வகையில் எப்போதும் இசையில் புதுமை செய்பவர் இளையராஜா என்றால் மிகையில்லை.

ஒரு பாடலுக்கு இசை அமைக்கக் கதை வேணும்னு அவசியம் இல்லை. மண்வாசனை திரைப்படத்தின்போது கம்போசிங் நடந்தது. அப்போ இளையராஜா போட்ட பாட்டு தான் அரிசி குத்தும் அக்கா மகளே பாட்டு. அதுக்கு பாரதிராஜா கதை சொல்லலை. தனக்குத் தோன்றிய டியூனை இளையராஜா வாசித்தார். அது ரொம்ப நல்லாருந்ததால இந்தப் பாட்டை நிச்சயமாகப் படத்தில் பயன்படுத்தணும்னு முடிவு செய்தோம்.
அதுக்கு ஏற்ற மாதிரி படத்துல சரியான இடம் அமையல. அதனாலதான் பாடல் காட்சியை எடுக்க சற்று காலதாமதம் ஆனது. அதன்பிறகு இந்த இடத்துல அமைஞ்சா நல்லாருக்கும்னு முடிவு பண்ணினதுக்குப் பிறகு அந்தப் பாடல்காட்சி படமாக்கப்பட்டது. அதே மாதிரிதான் ஆர்.சுந்தரராஜன் இளையராஜா போட்ட 7 பாடல்களை வைத்தே கதையை உருவாக்கி படமாக்கி இருக்கிறார். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.